உரிய விலை கொடுக்க நேரும்அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை| Dinamalar

பீஜிங், ஆக. 4-

‘தைவான் விவகாரத்தில் தலையிட்டால் உரிய விலை கொடுக்க நேரிடும்’ என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தைவானுக்கு சென்ற அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, ஒரு நாள் விஜயத்திற்குப் பின் தனி விமானத்தில் அமெரிக்கா கிளம்பிச் சென்றார்.தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை தன்னுடன் அதிகாரபூர்வமாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொண்டுள்ளது. இதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றார். ‘நான்சி பெலோசி தைவான் செல்வது, தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறிய செயலாக இருக்கும்’ என, அமெரிக்காவுக்கு சீனா ஏற்கனவே எச்சரித்திருந்தது. இது தொடர்பாக சீன அதிபர் ஷீ ஜிங்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு நடத்தினார். இதை மீறி நான்சி பெலோசி தைவான் சென்றது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திஉள்ளது. இதையடுத்து, நேற்று தைவான் அருகே சீனா ஏவுகணை பயிற்சி மேற்கொண்டது. அத்துடன் தைவான் விமான தளம் அருகே 27 சீன போர் விமானங்கள் பறந்தன. இதனால், தைவானில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் சீனாவின் பீஜிங் நகரில், வெளியுறவு துறை துணை அமைச்சர் சை பெங், அமெரிக்க துாதர் நிகோலஸ் பர்ன்சை அவசரமாக அழைத்து, தைவான் விவகாரம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்தார். ‘எச்சரிக்கையை மீறி அமெரிக்க நடந்து கொண்டது மிகப் பெரிய தவறு; அதற்கு அமெரிக்கா உரிய விலை தர வேண்டியிருக்கும்’ என சை பெங் எச்சரித்ததாக, சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தைவானை கைவிட மாட்டோம்

அமெரிக்க பார்லி., பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி, நேற்று தைவான் அதிபர் திசய் இங் – வென்னை சந்தித்துப் பேசினார். அப்போது நான்சி பெலோசி பேசியதாவது: உலக நாடுகள் முன் ஜனநாயகம் மற்றும் ஏகாதிபத்தியம் என இரு வாய்ப்புகள் உள்ளன. தைவானில் மட்டுமல்லாது உலகெங்கிலும் ஜனநாயகம் தழைத்தோங்கச் செய்ய அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. சுயாட்சி புரியும் தைவானுக்கு அளித்த உறுதிமொழியை அமெரிக்கா கைவிடாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். தைவானுக்கு அமெரிக்கா என்றும் துணையாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.