கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மைக்கும் தடுப்பூசி வருது!: ஒன்றிய அமைச்சருடன் சீரம் சிஇஓ பேச்சு

புதுடெல்லி: கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மை தொற்றுக்கு தடுப்பூசி தயாரிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக ஒன்றிய அமைச்சரை சந்தித்த சீரம் சிஇஓ ஆதார் பூனாவாலா தெரிவித்தார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு, மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருந்தும் கொரொனா தொற்று உருமாறிய வைரசாக மீண்டும் பரவி வருகிறது. அந்த வகையில் குரங்கம்மை என்ற புதியவகை வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 8 பேர் குரங்கம்மை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், குரங்கம்மை நோய் தொற்றின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில், குரங்கம்மை நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். முன்னதாக, சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ ஆதார் பூனாவாலா ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சமீபத்தில் சந்தித்த பிறகு இந்த கருத்துக்கள் வெளிவந்தன. இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஆதார் பூனாவாலா அளித்த பேட்டியில், ‘ஒன்றிய அமைச்சர் உடனான எனது சந்திப்பு எப்போதும் போல் சிறப்பாக இருந்தது. தடுப்பூசிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அமைச்சரிடம் தெரிவித்தேன். குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசியை கண்டறிவது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.