சேந்தமங்கலம்: மூன்று தரப்பு மோதலில் கார் கண்ணாடிகள், பைக்குகள் உடைப்பு – போலீசார் குவிப்பு

சேந்தமங்கலத்தில் மூன்று தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதில் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. அங்கு நிலவிய பதற்றமான சூழலை அடுத்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவில் செம்மேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க புதிய திராவிட கழக கட்சியினர் நாமக்கல்லில் இருந்து 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக சேந்தமங்கலம் வழியாக கொல்லிமலைக்கு சென்றனர். அப்போது சேந்தமங்கலம் பகுதியில் இருந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினரும் தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி ஓடாநிலைக்கு அஞ்சலி செலுத்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சேந்தமங்கலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி புறப்பட்டுள்ளனர்.
image
இரு தரப்பினரும் சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் சந்தித்தபோது வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் அப்பகுதியில் இருந்த புதிய தமிழகம் கட்சியின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை கிழித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இது குறித்து தட்டிக்கேட்டு, ’எதற்காக தங்கள் கொடியை கிழித்தீர்கள்?’ எனக் கூறி அங்கிருந்த கல், செங்கல் போன்ற ஆயுதங்களால் புதிய திராவிடர் கழகம் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர்களின் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இதில் 10-க்கு மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளும் இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தது. சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
image
இதில் சிலரை தவிர யாரும் புகார் அளிக்காத நிலையில் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து சம்பவ இடத்திற்கு நாமக்கல் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் விரைந்து வந்து அப்பகுதியில் இருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.