மதுரை: திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமாக மதுரை மற்றும் சென்னையில் உள்ள வீடு மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்மான வீடுகள் மற்றும் திரையரங்குகளில் வருமான வரித் துறையினர் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று காலை 6 மணி முதல் நடைபெற்று வரும் இந்த சோதனை இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அதேபோல் தெப்பக்குளம் பகுதியில் உள்ள அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமியின் வீடு, அன்புச்செழியனுக்கு சொந்தமான திரையரங்கு, ஹோட்டல் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு: இந்த சோதனையின்போது, அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் பொருத்தப்ட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, கடந்த 3 மாதங்களாக பதிவான காட்சிகள், வீட்டிற்கு வந்துசென்ற நபர்கள் உள்ளிட்டவை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் மென்பொறியாளர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் உள்ளிட்டவைகள் குறித்து மதிப்பிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர்கள் வரவழைக்கப்பட்டு, நகை மதிப்பீடு செய்யும் பணிகளும், பணம் எண்ணும் இயந்திரங்களின் உதவியுடன் கைப்பற்றப்பட்டத் தொகை எண்ணப்படும் பணியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர் ஜி.என்.அன்புச்செழியன். சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்வது, திரையரங்கம், ஓட்டல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த இவர் `கோபுரம் பிலிம்ஸ்’ என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியன் வீடு, தியாகராய நகர் ராகவய்யா தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. மேலும், மதுரை காமராஜர்புரத்தில் உள்ள அன்புச்செழியனின் வீடு, மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் உள்ள ‘கோபுரம்’ ஓட்டல், செல்லூர் பகுதியில் உள்ள ‘கோபுரம்’ திரையரங்கிலும் சோதனை நடந்தது.
இதேபோல, தெப்பக்குளம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அழகர்சாமி வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் பல குழுக்களாகப் பிரிந்து, சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு சென்னையில் 10, மதுரையில் 30 என சுமார் 40 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நடிகர் விஜய் நடித்த `பிகில்’ திரைப்படம் ரூ.300 கோடி வசூல் செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில், கடந்த 2020-ல் அப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். சினிமா நிறுவனம், நடிகர் விஜய், ஃபைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் வருமான வரித் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், வேலூர் திரைப்பட விநியோகஸ்தர் சீனிவாசன் உள்ளிட்டோர் வீடு, அலுவலகம் என சுமார் 40 இடங்களில் நேற்று வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.