இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியோடு முடிவடைவதையொட்டி, வரும் 6-ம் தேதி அந்த பதவிக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. பா.ஜ.க கூட்டணியின் சார்பாக மேற்குவங்க ஆளுநர் ஜெக்தீப் தன்கரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.

பா.ஜ.க கூட்டணியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட உடனேயே, துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெக்தீப் தன்கரை ஆதரிப்பதாக பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்தது. அதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் யாவும் சற்றும் எதிர்பாராத வகையில், தேர்தலில் வாக்களிப்பதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும், எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறார்.

இன்று காலை மாயாவதி தன் ட்விட்டர் பக்கத்தில், “நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில், அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இணக்கம் ஏற்படாத காரணத்தினால், இறுதியாக அதற்கான தேர்தல் நடைபெற்றது. இது அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போதும், அதே சூழ்நிலையில் தான், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலும், நடைபெறவிருக்கிறது. எனவே பொது நலன் மற்றும் அதன் சொந்த இயக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஜெக்தீப் தன்கருக்கு ஆதரவளிக்க பகுஜன் சமாஜ் கட்சி முடிவு செய்திருக்கிறது. அதனை நானும் இன்று முறையாக அறிவிக்கிறேன்” என இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார்.
மாயாவதி ஒருபக்கம், பா.ஜ.க-வின் புல்டோசர் அரசியலை எதிர்த்துவந்த போதிலும், பா.ஜ.க கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளித்திருப்பது எதிர்கட்சிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக நடைபெற்ற குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும், பா.ஜ.க கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவையே பகுஜன் சமாஜ் ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.