புதுடெல்லி: அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்பு வழங்கும் விவகாரத்தில் நிபுணர்கள் கொண்ட சிறப்பு குழுவை அமைக்க உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி ரமணா, ‘‘இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்தை ஒன்றிய அரசால் நடத்த இயலாமல் போகலாம். உண்மையை கூற வேண்டுமென்றால் எந்த ஒரு அரசியல் கட்சிகளும் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு விரும்பாமல் இல்லை. அதனால் இது முக்கியமான பிரச்னையாக உள்ளது. அதனால் இந்த விவகாரம் குறித்து நிபுணர்களை கொண்ட சிறப்பு குழு அமைத்து நல்ல முன்வடிவுகளை கொண்டு வரலாம்’’ என கருத்து தெரிவித்தார். இதனை ஏற்பதாக தெரிவித்த ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர், ‘‘இலவச அறிவிப்புகள் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையத்தின் யோசனையுடன் செயல்பட வேண்டும். எனவே நிபுணர்குழு அமைக்கலாம் என்ற நீதிமன்றத்தின் யோசனை ஏற்புடையது’’ என்றார். சிறப்பு குழுவில், எதிர்க்கட்சிகள், ரிசர்வ் வங்கி நிதி ஆயோக், நிதி குழு சட்ட ஆணையம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு தலைமை நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
