நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் திடீர் திருப்பம் சோனியா வீட்டில் போலீஸ் குவிப்பு: யங் இந்தியா அலுவலகத்திற்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை; காங்கிரஸ் தலைமை ஆபீசுக்கு தலைவர்கள் செல்ல தடை

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து, சோனியா காந்தி வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு கட்சி தலைவர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்தது. இந்த பத்திரிகையை நடத்த, காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.90 கோடி கடன் வழங்கப்பட்டது. இந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம் வாங்கிக் கொண்டது. வெறும் ரூ.50 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ‘யங் இந்தியா’ நிறுவனம் ரூ.90 கோடி கடனுக்காக அசோசியேட்டட் ஜர்னலுக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை பெற்றதில் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக அமலாக்கத்துறை சட்ட விரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. விசாரணைக்கு ஆஜராக சோனியா, ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் 5 நாட்கள் ராகுலிடம் 50 மணி நேரமும், கடந்த மாதம் சோனியாவிடம் 3 கட்டமாக 11 மணி நேரமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸ் எனும் கட்டிடத்தில் இயங்கி வரும் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர். சோனியா, ராகுலிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த கூடுதல் தகவலின் அடிப்படையில் ஆதாரங்களை திரட்ட இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நேஷனல் ஹெரால்டு தொடர்பான 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், சோதனை நடத்தி முடித்த அடுத்த நாளான நேற்று, ஹெரால்டு ஹவுஸ் கட்டிடத்தில் செயல்படும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தலைமை அலுவலகமான ‘யங் இந்தியா’ அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். அலுவலகத்தின் கதவில் ஒட்டப்பட்ட நோட்டீசில், ‘அமலாக்கத்துறையின் முன் அனுமதி இன்றி இந்த அலுவலகத்தை யாரும் திறக்கக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதால், யங் இந்தியா நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சோனியா காந்தி வீட்டின் முன்பாகவும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். அதோடு, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கட்சி தலைவர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது. அங்கும் வஜ்ரா உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தியும், தடுப்புகளை அமைத்தும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இது குறித்து டெல்லி போலீஸ் அதிகாரிகள் அளித்த பதிலில், ‘காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அக்பர் சாலையில், சில போராட்டக்காரர் திரள உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் முன்னெச்சரியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’’ என தெரிவித்தனர். இதனால், இந்த சம்பவம் அரசியல் ரீதியாக பெரும் புயலை கிளப்பி உள்ளது. அமலாக்கத்துறை மூலமாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஒன்றிய பாஜ அரசு ஈடுபடுவதாக பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.* எதற்காக சீல்?சீல் வைக்கப்பட்டது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘யங் இந்தியா நிறுவனத்தில் சோதனையின் போது, அறைகளை திறந்து காட்ட வருமாறு, அந்நிறுவனத்தின் பொறுப்பாளரான காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவுக்கு இமெயிலில் நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். ஆனால், நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) மாலையில் வந்த அவர் திரும்பிச் சென்று விட்டார். இதனால் சோதனை நடத்த முடியவில்லை. இதன் காரணமாக, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. யங் இந்தியா நிறுவனம் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் சோதனையின் போது வந்தால், இந்த சீல் அகற்றப்படும்,’ என்றனர்.* ஜனநாயக படுகொலைகாங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் அளித்த பேட்டியில், ‘‘பாஜ ஆட்சியின் கீழ் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து ஒன்றிய விசாரணை அமைப்புகள் நடத்திய வரும் நடவடிக்கைகளை கண்டித்து வரும் 5ம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்த உள்ளது. இதை சீர்குலைக்கவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.