யாழ் மாவட்டத்தில் பெரும்போக நெற்பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும், கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இயற்கையான நீர்ப்பாசன குளங்கள் இல்லாததால் மழைநீரை மாத்திரம் பயன்படுத்தி விவசாயிகள் நெற் பயிர்ச்செய்கையை மேற்கொள்கின்றனர்.
பெரும்போக செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் வழக்கமாக, ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், வயல்நிலங்களை உழுது, பண்படுத்தி தயார்படுத்தலில் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில் கடந்த வாரங்களில் பெய்த மழையினால் நிலங்கள் உழவுக்கு தயார்நிலையில் உள்ளது. இருப்பினும் தற்போதையை எரிபொருள் நெருக்கடி காரணமாக உழவு இயந்திரங்களை பெறுவதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதன்காரணமாக தமது வயல் நிலங்களை உழுவதற்குத் தேவையான டீசலை விவசாய அமைப்புகள் ஊடாக பெற்றுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பான கோரிக்கை கடிதங்கள் விவசாயிகள் மட்டத்திலிருந்தும், யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் பி.தெய்வநாயகியிடமிருந்தும் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி, யாழ் மாவட்டத்தில் 32,720 ஏக்கர் நிலப்பரப்பு 2022/2023 பெரும்போகத்திற்கான பயிர்ச்செய்கை நிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றை பண்படுத்துவதற்காக ஒரு ஏக்கருக்கு 8 லீற்றர் டீசல் தேவை என கணக்கிடப்படுவதால் மொத்தமாக 261,760 லீற்றர் (32,720*8) என்ற அடிப்படையில் டீசலினை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தேவை உள்ளது.
தற்போது மாவட்டத்துக்கு கிடைத்துள்ள தென்மேற்கு பருவக்காற்று மழையினால் விவசாய நிலங்கள் உழுவதற்கு ஏற்ற நிலையில் உள்ளதால், விவசாயிகளுக்கு தேவையான 261,760 லீற்றர் டீசலை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வழங்கி உதவுமாறு அங்கஜன் இராமநாதன் துறைசார் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.