புதுடெல்லி: கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் தொடுத்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், “ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என கடந்த மார்ச் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் நேற்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் ஆஜராகி, “இந்த மனு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும். இல்லாவிடில் ஹிஜாப் தடையை ரத்து செய்துவிட்டு, இவ்வழக்கை நிதானமாக விசாரிக்கலாம்” என்றார்.
அதற்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “இந்த வழக்கை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும். தற்போது ஒரு நீதிபதிக்கு உடல்நிலை சரி இல்லை. அந்த அமர்வு ஹிஜாப் விவகாரத்தில் அடுத்தக்கட்ட முடிவை எடுக்கும். அதுவரை ஹிஜாப் தடையை ரத்து செய்ய முடியாது” எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.