கனல் கண்ணனின் ‘பெரியார் சிலை உடைப்பு’ குறித்த பேச்சு! காவல்துறையில் திராவிடர் கழகம் புகார்…

சென்னை: திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்படும் நாளே இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறினார். இது கலவரத்தை தூண்டும் செயல் என்று பெரியார் திராவிடர் கழகம் டிஜிபியுடம் புகார் அளித்துள்ளது. பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரை அருண் தலைமையில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்து முன்னணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் – பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் இந்தப் பிரச்சாரம் நடைபெற்று வந்த நிலையில் அதன் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய கனல்கண்ணன்,  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முன்பாக கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் எனக் கூறியிருந்தார்.

இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,  திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் துரை.அருண் என்பவர் காவல்துறை இயக்குநரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என கனல் கண்ணன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாகவும் இதனால் சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.