கடலூர்: கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 1.15 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 50 கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியுள்ளது. இந்த நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தநீர் காவிரி ஆற்றில் விடப்படுகிறது. இதனால் கல்லணையில் இருந்தும், முக்கொம்பிலிருந்தும் கொள்ளிடம் ஆற்றில் ஆற்றில் விநாடிக்கு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கீழணையில் 9 அடி மட்டுமே தண்ணீரை தேக்க முடியும் என்பதால் வியாழக்கிழமை (ஆக.4) காலையில் இருந்து உபரி தண்ணீர் வெளியேற்றுவது அதிகப்படுத்தப்பட்டு வந்ததது. மாலை 6 மணிக்கு விநாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கரையோரத்தில் உள்ள 50 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் உத்தரவின் பேரில் மாவட்டத்துக்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் இடது கரையில் உள்ள கிராமங்களில் நீர்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
தீயணைப்புதுறையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்று பாலம் உள்ளிட்ட கரையோரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ரப்பர் படகு உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வருவாய்த் துறையினர் கிராமங்கள் தோறும் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து பொதுமக்கள் பாதுகாப்பகாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கீழணைக்கு அளவு அதிகமாக தண்ணீர் வருவதால் கொள்ளிடம் ஆற்றில் படிப்படியாக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டு விநாடிக்கு சுமார் 2 லட்சம் கன தண்ணீர் வெளியேற்ற வாய்ப்புள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.