ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு சுற்றுலாத் துறை வளர்ச்சி பெற்றுள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 – ஏ பிரிவுகளை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆக.,5ல் மத்திய அரசு ரத்து செய்தது. இதனை தொடர்ந்து அங்கு சட்டம் ஒழுங்கு, உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் இணைப்பு திட்டங்களில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக அங்கு சுற்றுலாத்துறை வளர்ச்சி பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக ரூ.786 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.இங்கு வருபவர்கள், சுற்றுலாவுக்காக மட்டும் வரவில்லை. ஆன்மீகம் மற்றும் சாகச நிகழ்ச்சிகளுக்காகவும் இங்கு வருகின்றனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு 102 விமானங்கள் தினமும் வந்து சென்றன. இந்த விமான நிலையம் 15,199 பயணிகளை கையாண்டது. அதிகளவு பயணிகள் வந்து சென்றதை அறிந்த மத்திய அரசு, எதிர்காலத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இரண்டாவது முனையம் அமைக்க பரிசீலனை செய்து வருகிறது.
காஷ்மீரில் மிகவும் புகழ்பெற்ற துலீப் தோட்டம் கடந்த மார்ச் 13ல் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது. தற்போது, உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்துள்ளனர். இந்த சீசனில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதை தொடர்ந்து, பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் பணிகள் உருவாகி உள்ளன.
இது தொடர்பாக சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், ” காஷ்மீர் உண்மையிலேயே ஒரு சொர்க்கம். சாகச நிகழ்ச்சிகள் அனுபவித்ததுடன், மனதை மயக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் அழகை அனுபவித்துள்ளோம். இதனால், இனி வரும் காலங்களில் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும், காஷ்மீரின் அழகை எடுத்து காட்டவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க துவங்கி உள்ளது. கந்தர்பால் மனஸ்பால் ஏரியில், உள்ளூர் கலை, கலாசாரம், உணவு மற்றும் நீர் விளையாட்டு உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறும் வகையில், நிகழ்ச்சிகளை சுற்றுலாத்துறை நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் இன்னும் அறியப்படாத சுற்றுலா தலங்கள் இன்னும் உள்ளன. கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு சட்டம் ஒழுங்கு மேம்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

பாரமுல்லாவில் உள்ள வாட்லாப் போன்ற இடத்தை பார்க்கவும், பகல்கமில் கோல்ப் விளையாடவும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காஷ்மீர் வரும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள கிராமப்புற வாழ்க்கையை தெரிந்து கொள்ளும் வகையில் சுற்றுலா திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
கடந்த 2021 அக்., முதல் 2022 மார்ச் வரை ஜம்மு காஷ்மீருக்கு 79 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இது, ஜம்மு காஷ்மீர் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு தற்போதைய சூழ்நிலை உகந்ததாக உள்ளதை காட்டுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்