புதுடெல்லி: தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்த உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவர, அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச பொருட்கள், வாக்குறுதிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தேர்தல் பிரச்சாரத்தில், அரசு நிதியில் இருந்து இலவச திட்டங்களை வழங்குவோம் என வாக்குறுதி அளிப்பது லஞ்சம் கொடுப்பதற்கு இணையானது. இதை தடுக்க வேண்டும் என கூறப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோலி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘‘தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் இஷ்டத்துக்கு இலவச அறிவிப்புகளை வெளியிடுவது பொருளாதார சீரழிவுக்கு வழி வகுக்கும்’’ என்றார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச திட்டங்களை கண்காணிக்க நிபுணர் குழு தேவை. இந்த குழுவில் நிதி ஆயோக், நிதி ஆணையம், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ரிசர்வ் வங்கி மற்றும் இதர தரப்பினர் இடம் பெற வேண்டும். அவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சியினரின் இலவச அறிவிப்புகளை கட்டுப்படுத்துவது பற்றிய ஆலோசனைகளை மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும். அரசியல் கட்சியினர் அறிவிக்கும் இலவச வாக்குறுதிகள் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதன் சாதக, பாதகங்களை தீர்மானிக்க இந்த குழு தேவை. இந்த நிபுணர் குழு அமைப்பது குறித்து மனுதாரர்களும், மூத்த வழக்கறிஞரும், எம்.பி.யுமான கபில் சிபல் ஆகியோரும் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுக்காததால், இந்த நிலை ஏற்பட்டது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘‘இலவசங்கள் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாகத்தான் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டப் பட்டன’’ என கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘‘அப்படியானால் அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யும்’’ என்றனர்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதிடுகையில், ‘‘இலவச அறிவிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி சட்டம் நிறைவேற்றலாம்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, ‘‘இலவச அறிவிப்புகள் குறித்து நாடாளுமன்றம் விவாதிக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா? இது குறித்து எந்த கட்சி விவாதம் நடத்தும்? இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை எந்த அரசியல் கட்சியும் எதிர்க்காது. வரி செலுத்துவோர் மற்றும் நாட்டின் பொருளாதாரம் பற்றி நாம்தான் சிந்திக்க வேண்டும்’’ என்றார்.