'நிறை புத்தரிசி' பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ‘நிறை புத்தரிசி’ பூஜைக்காக புதன்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான செட்டிகுளங்கரை வயல்களில் விளைந்த நெற்பயிரை கதிருடன் சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்திற்கு தலையில் சுமந்து வந்து, கோயில் கருவறைக்குள் வைத்து பூஜை செய்வதே நிறை புத்தரிசி பூஜை என்று அழைக்கப்படுகிறது.
image
சன்னிதானத்தில் கருவறைக்குள் வைத்து பூஜை செய்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பிரசாதத்தை ஆர்வமுடன் வாங்கிச் செல்வார்கள். அந்தவகையில் இந்த ஆண்டு ‘நிறபுத்தரி பூஜா’என்று மலையாளத்தில் அழைக்கப்படும் நிறை புத்தரிசி பூஜை (வியாழக்கிழமை) இன்று அதிகாலை 5.40 மணிக்கு நடைபெற்றது. இதற்காக சபரிமலை நடை (புதன்கிழமை) நேற்று மாலை திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் மற்றும் நேரடி புக்கிங் செய்த அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
image

தற்போது கேரளாவில் பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பம்பை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. பெருவழிப்பாதை என அழைக்கப்படும் நீதிமலை வழியாக நடந்து செல்வதற்கும் பத்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிறை புத்தரிசி பூஜைகளுக்குப் பின் (வியாழக்கிழமை) இன்றிரவு ஹரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்படும். இதையடுத்து ஆவணி மாதம் மலையாள மாத சிங்கம் மாத பூஜைக்காக வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.