’நீ இங்கயே இருமா நான் வரேன்’.. சிம் இல்லா செல்போனை கொடுத்து தாயை தவிக்கவிட்டு சென்ற மகன்!

கர்நாடகாவில் கோவிலுக்கு அழைத்துச்செல்வதுபோல் அழைத்துச்சென்று சிம் கார்டு இல்லாத போனை கொடுத்து தாயை தவிக்கவிட்டுச் சென்றுள்ளார் ஒரு மகன்.
கர்நாடகா மாநிலத்திலுள்ள கோப்பல் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கோப்பல் மாவட்டத்தில் ஹூலிஜி கிராமத்திலுள்ள பிரபல கோவிலான ஹூலிஜெம்மா கோவிலுக்கு தன்னுடன் 80 வயது தாயை அழைத்துச் சென்றுள்ளார் ஒரு மகன். தான் சிறுது நேரத்தில் வந்துவிடுவதாக உறுதியளித்துவிட்டு தாயிடம் ஒரு செல்போனையும் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தனது செல்போன் எண்ணை எழுதியிருப்பதாகக் கூறி ஒரு பேப்பரையும் கொடுத்து கோவிலில் உட்கார வைத்துச் சென்றிருக்கிறார்.
வெகுநேரமாகியும் தனது மகன் திரும்பி வராததால் பயந்துபோன தாய் கோவில் ஒரு மூலையில் சென்று அமர்ந்துவிட்டார். அவரை கவனித்த பக்தர்கள் அவரிடம் விசாரித்ததில் நடந்த சம்பவத்தைக் கூறி செல்போனை கொடுத்திருக்கிறார். அதனைப் பார்த்தபோதுதான் தெரிந்திருக்கிறது செல்போனில் சிம்கார்டே போடவில்லை என்று. மேலும் தனது எண் இருப்பதாகக் கூறி கொடுத்த பேப்பரை பார்த்தபோது அது வெறும் காகிதம் என்பதும் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து பக்தர்கள் அந்த முதிர்வயது தாயாருக்கு உணவும், போர்வையும் கொடுத்து அமரவைத்தனர்.
image
மேலும் பக்தர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அங்குவந்த போலீசர் அவரிடம் விசாரித்ததில் அவருடைய பெயர் காசிம் பி என்பதும், அவர் உஜ்ஜயானி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தவிர வேறு எந்த விவரமும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. எனவே அவரது குடும்பத்தாரை தொடர்புகொண்டு இதுகுறித்து விவரம் எதுவும் கொடுக்க முடியவில்லை எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கோவிலிலிருந்த பக்தர்கள் முதியோர் உதவி எண்ணிற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததாகவும், தேசிய முதியோர் உதவி எண் மண்டல அதிகாரி முத்தண்ணா குட்னெப்பனவரும் அவரது ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்து காசிம் பியை முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர். மேலும் விவரமில்லாத தாயை தனியாக தவிக்கவிட்டுச் சென்ற மகனையும் தேடிவருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.