சென்னை: வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த, பல கோடி ரூபாய் மதிப்பிலான 9 சுவாமி சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றில் 7 சிலைகள், சுமார் 300 ஆண்டுகள் பழமையானவை.
சென்னை பாரிமுனை பிடாரியார் கோயில் தெருவைச் சேர்ந்த பமீலாஇமானுவேல் என்பவரது வீட்டில்,வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பழங்கால கோயில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இப்பிரிவின் டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின்பேரில், ஐஜி ஆர்.தினகரன், எஸ்.பி.ரவி ஆகியோரது ஆலோசனை யின்படி தனிப்படை அமைக்கப் பட்டது. பின்னர், தனிப்படை போலீஸார் பமீலா இமானுவேல் வீட்டில் சோதனை நடத்தினர்.
இதில், தட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வாணை, சனீஸ்வரன், அம்மன், வீரபாகு சிலைகள், பீடத்துடன் கூடிய பெண் தெய்வம் சிலை என மொத்தம் 9 சிலைகள் மீட்கப்பட்டன.
தொடர் விசாரணையில், பமீலாஇமானுவேலுவின் கணவர் மானுவல் ஆர்.பினிரோ, சுவாமி சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் தொழிலில் ஈடுபட்டதும்,அவர் அண்மையில் இறந்துவிட்டதால், இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முடியாமல், வீட்டில்பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீஸாரால் கைப்பற்றிய சிலைகளை, தொல்லியல் துறைவல்லுநர் தரன் ஆய்வு செய்தார். மீட்கப்பட்ட 9 கற்சிலைகளில் 7 சிலைகள் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்தவை என்பதும், சர்வதேச சந்தையில் அவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும் என்பதும் தெரியவந்தது.
இந்த சிலைகள் எந்த கோயில்களில் இருந்து திருடப்பட்டவை, திருடியது யார் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சிலை கடத்தல் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கின்றனரா என்றுபமீலா இமானுவேலுவிடம் விசாரித்து வருகின்றனர். இந்த 9 சிலைகளை மீட்ட, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.