‘ஸ்டண்ட் மாஸ்டர்’ கனல் கண்ணன் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்

பெரியார் சிலை குறித்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது :

இந்து முன்னணியைச் சார்ந்த கனல் கண்ணன் என்பவர் ஸ்ரீரங்கம் ரெங்கனாதர் கோயிலுக்கு முன்பாகவுள்ள தந்தை பெரியார் சிலையை அகற்ற வேண்டும், அதை என்றைக்கு இடித்துத் தள்ளுகிறோமோ, அன்றைக்குத் தான் இந்துக்களுக்கான எழுச்சி ஏற்படும் என்று வன்முறையாகப் பேசியிருக்கிறார்.

இந்திய அரசியல் சட்டத்தில் எல்லா கருத்துகளுக்கும் இடமுண்டு. கடவுள் மறுப்பும் உண்டு, கடவுள் ஆதரவும் உண்டு. எந்த கருத்தையும் ஜனநாயகத்தில் பேச உரிமையுண்டு. இவை தான் இந்திய ஜனநாயகத்தின் மாண்பு.

சாவர்க்கர் இந்திய சுதந்திரத்திற்கு விரோதமாக இருந்தவர். மகாத்மா காந்தியைக் கொன்ற வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால், பாரதிய ஜனதா வந்த பிறகு, அவருடைய படத்தை நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வைத்ததை காங்கிரஸ் கட்சி சகித்து ஏற்றுக் கொண்டது. இது தான் ஜனநாயகம். 

கனல் கண்ணன்

கனல் கண்ணன் பேசியிருப்பது உரிமைகளுக்கு எதிரான வன்முறை பேச்சு, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான பேச்சு. சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற பேச்சு. ஜெர்மனியில் ஹிட்லர் என்ன பேசினாரோ, இத்தாலியில் முசோலினி என்ன பேசினாரோ, அதையே இந்தியாவில் இவர்கள் பேசி வருகிறார்கள்.

அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழகத்தை அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் வன்முறைக் களமாக மாற்ற வேண்டாம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் பெருமை. அதை தமிழகத்தில் சீர்குலைக்க வேண்டாம். இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய கனல் கண்ணன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் அமைப்புகள் புகார் அளித்துள்ளன.

இந்த நிலையில், கைது நடவடிக்கைக்கு பயந்து ‘ஸ்டண்ட் மாஸ்டர்’ கனல் கண்ணன் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.