
20ம் வருட திரையுலக பயணத்தில் கனிகா
2002ல் இயக்குனர் சுசி கணேசன் தனது முதல் படமாக இயக்கிய பைவ்ஸ்டார் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனிகா, பின்னர் இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.. தொடர்ந்து சில வருடங்கள் பிசியாக நடித்தவர், பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.. கடந்த ஐந்து வருடங்களாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சுரேஷ்கோபியுடன் இவர் இணைந்து நடித்த பாப்பன் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
அதேபோல தமிழில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் கனிகா. அந்தப் படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது தனது திரையுலக பயணத்தில் 20 ஆம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ள கனிகா அந்த மகிழ்ச்சியை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனது இத்தனை வருட பயணம் குறித்து அவர் கூறும்போது, “20 வருடங்களாக இந்த அழகான துறையில் இருந்திருக்கிறேன். நிலைத்து நின்று இருக்கிறேன். பல படங்களுக்கு நோ சொல்லியிருக்கிறேன். சில படங்களுக்கு எஸ் சொல்லி இருக்கிறேன். என்ன காரணங்களுக்காக என்பது எனக்கு மட்டுமே தெரியும். என்னுடைய நேர்மையான எண்ணங்கள் என்னை இந்த உயரத்திற்கு அழைத்து வந்துள்ளன” என்று கூறியுள்ளார்