சிறுவாணி அணையில் 45 அடியை நெருங்கும் முன் நீர்த் திறப்பு கூடாது: கேரளாவிடம் தமிழகம் கோரிக்கை

கோவை: சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக, கேரள அதிகாரிகளுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 45 அடியை நெருங்கும் முன்னர் தண்ணீரை திறக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை, கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையில் 49.50 அடி வரை தண்ணீரை தேக்க முடியும். ஆனால், அணையின் பாதுகாப்புக் காரணங்களுக்காக கேரள அரசின் சார்பில் 45 அடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் சிறுவாணி அணை மற்றும் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 19-ம் தேதி நிலவரப்படி 45 அடியை நெருங்கியிருக்க வேண்டும். ஆனால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் சுமார் 8 அடி வரை குறைந்திருந்தது.

அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரித்த போது, கேரள குடிநீர் பிரிவு அதிகாரிகள், சிறுவாணி அணையில் நீர்மட்டம் 45 அடியை நெருங்குவதற்குள், 40 முதல் 43 அடியாக இருந்த சமயத்திலேயே, தண்ணீரை திறந்து விட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் விரிவான திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக கேரள குடிநீர் பிரிவு அதிகாரிகளை சந்தித்து பேசவும் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கோவை பிரிவு அலுவலர்கள், மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்துக்கு இன்று (ஆக 5-ம் தேதி) சென்றனர்.

சிறுவாணி அணையை பராமரிக்கும் கேரள குடிநீர் பிரிவு செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சிறுவாணி அணையில் 45 அடி வரை தண்ணீரை தேக்க வேண்டும். 45 அடி நெருங்கிய பின்னரே தண்ணீரை திறக்க வேண்டும். அதற்கு முன்னர் தண்ணீரை திறக்க கூடாது என கேரள குடிநீர் பிரிவு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். அதைத் தொடர்ந்து குழுவினர் சிறுவாணி அணையின் நீர்மட்ட நிலவரத்தை பார்வையிட்டோம். சிறுவாணி அணையில் நேற்றைய நிலவரப்படி 41.23 அடி அளவுக்கு நீர்மட்டம் உள்ளது. அணையில் 187 மி.மீட்டரும், அடிவாரத்தில் 61 மி.மீட்டர் அளவுக்கும் மழை பெய்துள்ளது,’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.