குற்றவாளிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 8ம் தேதி தண்டனை விபரம்; நிலக்கரி ஊழலால் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு: சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு அறிக்கை

புதுடெல்லி: நிலக்கரி ஊழலால் அரசு கருவூலத்திற்கு ரூ. 1.86 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் பரபரப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் லோகாரா கிழக்கு நிலக்கரி சுரங்கத்தை கிரேஸ்  இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக  டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, நிலக்கரி  சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில், கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார்  எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி பல்வேறு வழக்குகளை தாக்கல்  செய்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிலக்கரித்துறை முன்னாள்  செயலர் ஹெச்.சி.குப்தா, முன்னாள் இணைச் செயலர்  கே.எஸ்.குரோபா, நாக்பூரைச் சேர்ந்த கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும்  அதன் இயக்குநர் முகேஷ் குப்தா ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம்  அறிவித்தது. இவர்களுக்கு தலா ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை  கிடைக்கும் எனக்கூறப்படும் நிலையில், வழக்கின் தண்டனை விபரங்கள் வரும் 8ம்  தேதி அறிவிக்க உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.  இது நிலக்கரி ஊழல்  வழக்குகளில் 11வது தீர்ப்பாகும். நிலக்கரித்துறை முன்னாள் செயலாளரான  எச்.சி.குப்தா இதற்கு முன்னர் 3 நிலக்கரி ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக  அறிவிக்கப்பட்டார். தண்டனைகளுக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள  மேல்முறையீட்டு வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.  தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ‘நிலக்கரி ஊழல் என்பது நாட்டின் மிகப்பெரிய ஊழல். நிலக்கரி சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்க எந்த நிறுவனங்களும் முன்வராததுதான்  இந்த ஊழலுக்கான காரணமாக உள்ளது. பூமியில் அபரிவிதமாக கிடைக்கும் நிலக்கரியை நம்மால் எடுக்க  முடியவில்லை. அதனால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியா,  ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்தியாவுக்கு வெளிநாட்டு நிலக்கரியை இறக்குமதி  செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த ஊழல் காரணமாக 214 நிலக்கரி  சுரங்க ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதன் மூலம் அரசு கருவூலத்திற்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு  ஏற்பட்டுள்ளது’ என்று தண்டனை குறித்த விவாதத்தின் போது சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.