புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், ‘கியூட்’ நுழைவுத் தேர்வு, இரவு 9:00 மணி வரை நடந்தது. இது குறித்து பெற்றோர்கள் திரண்டு வந்து பல்கலை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை படிப்பில் சேர்வதற்கான ‘கியூட்’ நுழைவுத்தேர்வு நேற்று காலை, மாலை என இரு வேளையில் நடந்தது. புதுச்சேரி மாணவர்களுக்கு, காலாப்பட்டு மத்திய பல்கலைக் கழகம் தேர்வு மையமாக அமைக்கப்பட்டிருந்தது.பிற்பகல் 3:15 மணிக்கு துவங்க வேண்டிய நுழைவுத் தேர்வு, கால தாமதமாக மாலை 5:15 மணிக்குதான் துவங்கியது.
இதுதொடர்பாக, மாணவர்களின் பெற்றோர்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இரவு 7:00 மணி வரை மாணவர்கள் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள், பல்கலைக் கழகத்திற்கு திரண்டு வந்து, இதுகுறித்து கேள்வி எழுப்பினர். நிர்வாகத்தினர், ‘பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாலை நேர நுழைவுத் தேர்வு கால தாமதமாக 5:15 மணிக்கு துவங்கப்பட்டது.
தேர்வு முடிய, இரவு 9:00 மணி வரை ஆகும்’ என தெரிவித்தனர்.இதுகுறித்து பெற்றோர்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement