உலகை காக்க பரமேஸ்வரன் விஷத்தை உட்கொண்டார் என ஆங்கரை ரங்கஸ்வாமி தீட்சிதர் உபன்யாசம் செய்தார்.
புதுச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள சின்மய சூர்யா கோவிலில், கடந்த 1ம் தேதி ஸ்ரீமத் பாகவத மகோற்சவம் துவங்கியது. தினமும் ஆங்கரை ரங்கஸ்வாமி தீட்சிதர் உபன்யாசம் செய்து வருகிறார்.
நேற்று அவர் உபன்யாசம் செய்ததாவது: பக்தியின் பெருமை என்னவென்றால், கஜேந்திர என்கிற யானைக்கும் அருளியதாகும். அமிர்தம் பெற வேண்டும் என்ற நோக்கில், தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாக பாற்கடலில் இட்டு கடைந்தனர்.அச்சமயம் அந்த மலை நிலை தடுமாறி சரிந்தபோது, பகவான் கூர்ம அவதாரம் என்கிற ஆமையாக வடிவம் எடுத்து மலையை நிமிர்த்தி, அமிர்தம் கிடைக்குமாறு செய்தார்.
அந்த அமிர்தம் தங்களுக்கே வேண்டும் என அசுரர்கள் எடுத்துக்கொண்டு ஓடினர். அச்சமயம் பகவான் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை திசை திருப்பி, அமிர்தம் தேவர்களுக்கு கிடைக்கும்படி செய்தார்.அமிர்தம் கிடைத்தபோது அத்துடன் ஆலகால விஷமும் வந்ததால் அனைவரும் நடுங்கினர். விஷத்தின் தீய விளைவுகளில் இருந்து உலகை காக்க பரமேஸ்வன் தானே முன் வந்து அந்த விஷத்தை உட்கொண்டார். அதனால் கழுத்தில் நீலநிறம் தோன்றி நீலகண்டனாகவும் திகழ்ந்தார்.சுக்ராச்சாரியாரின் உதவியால் அசுரர்கள் மீண்டும் பலம் பெற்று, நல்லோர்களாகிய தேவர்களையும், தேவதைகளையும் துன்புறுத்தினர்.
எனவே பகவான் வாமன அவதாரம் எடுத்து அசுரர்களின் தலைவன் பனி சக்ரவர்த்தியிடம் சென்று, மூன்றடி மண்ணை யாசகம் பெற்றார். பின், தன் மூன்றடிகளால் மூன்று உலகையும் அளந்து தன் பொறுப்பில் கொண்டு வந்து, நல்லோர்களையும் காத்தருளி திருவிக்ரமாக திகழ்ந்தார்.அதேபோல் அசுரர்கள் வேதத்தை எடுத்துச் சென்று ஒளித்து வைத்துக் கொண்டனர். பகவான் மத்ஸாவதாரம் என்கிற மீனாக வடிவெடுத்து, கடலுக்கு அடியில் இருந்து வேதத்தை மீட்டருளினார்.இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement