போபால்: மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்களின் பதவியேற்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், சில கிராமங்களில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பதிலாக அவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் பதவி பிரமாணத்தை ஏற்றுள்ளனர். பெண்களின் தந்தை, கணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சாகர், தாமோ மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்துள்ளன. இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, சாகர் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி, ஜெய்சினாபர் உட்பட பல கிராம பஞ்சாயத்துகளின் ஆணையர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் கூறுகையில், ‘நாங்கள் பலமுறை அறிவுறுத்தியும் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வராமல், தங்கள் வீட்டு ஆண்களை அனுப்பி வைத்ததால், அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,’என்று புலம்பியுள்ளார்.
