சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களையும் முக்கியப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் சிற்றுந்து சேவையை தமிழகப் போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வசிப்பர்கள் மெட்ரோ ரயில் நிலையம் வந்து செல்லும் வகையில் இணைப்பு சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து ஐந்து புதிய வழித்தடங்களில் 10 சிற்றுந்துகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதன்மூலம், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, மாநிலக் கல்லூரி, எழிலகம், சென்னை பல்கலைக்கழகம் தலைமைச் செயலகம் வரை (S96), கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து செல்லம்மாள் கல்லூரி, கிண்டி ரேஸ் கோர்ஸ், குருநானக் கல்லூரி, வேளச்சேரி வழியாக வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் வரை (S97), சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை நீதிமன்றம், மத்திய கைலாஷ், டைடில் பார்க் வழியாக தரமணி வரை (S98), செனாய் நகர் மெட்ரோ நிலையத்திலிருந்து அமைந்தகரை மார்கெட், மேத்தா நகர், லயோலா கல்லூரி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர் வழியாக தி.நகர் பேருந்து நிலையம் வரை (S99), விமான நிலையம் மெட்ரோ நிலையத்திலிருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், பூண்டி கடைவீதி, தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு வழியாக தாம்பரம் மேற்கு (S100) ஆகிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.