தருமபுரி: பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் வந்த காதல் ஜோடி– உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு

அரூரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு வந்த காதல் ஜோடியை உறவினர்கள் அடித்து இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்ராஜ் (21). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது மற்றொரு தனியார் கல்லூரியில் படித்து வந்த பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த சந்தியா (20) ஆகிய இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
image
வெவ்வேறு சமுகத்தை சேர்ந்த இருவரும் படிப்பை முடித்துவிட்டு தங்களது சொந்தக் கிராமத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சந்தியாவிற்கு திருமணம் செய்ய அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்ததால் அதிர்ச்சியடைந்த சந்தியா, என்னை வந்து அழைத்துச் செல், இல்லையென்றால் உயிரை மாய்த்துக் கொள்வேன் என நவீன் ராஜுக்கு போன் செய்துள்ளார்.
இதையடுத்து செய்வதறியாமல் இருந்த நவீன்ராஜ், சந்தியாவை அரூருக்கு வரச் சொன்னதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அரூரில் உள்ள முருகர் கோயிலில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியினர், அரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு வந்துள்ளனர். அப்போது சந்தியாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் நிலைய வளாகத்தில் இருந்த சந்தியாவை அடித்து வெளியே இழுத்துச் சென்றனர். அப்போது சந்தியா அழுது கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
image
பின்னர் உறவினர்களிடம் இருந்து இருவரையும் மீட்ட காவல்துறையினர், அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து இருவரையும் பத்திரமாக அனுப்பி வைத்தனார். காவல் நிலைய வளாகத்தில் காதல் ஜோடியை தாக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.