நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யார்? : பார்லி.,யில் துவங்கியது தேர்தல்| Dinamalar

புதுடில்லி: நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், பார்லிமென்ட் வளாகத்தில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். தே.ஜ., கூட்டணிக்கு அதிக எம்.பி.,க்கள் இருப்பதால், அந்த கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜக்தீப் தன்கர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது; இன்று இரவே முடிவு வெளியாகிறது.

தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம், வரும் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், இன்று புதுடில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் நடக்கிறது. இதில், ராஜ்யசபா எம்.பி.,க்கள், நியமன எம்.பி.,க்கள், லோக்சபா எம்.பி.,க்கள் மட்டுமே ஓட்டளிப்பர். துணை ஜனாதிபதி தேர்தலில், எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தன்கர், 71, போட்டியிடுகிறார். இவர், ராஜஸ்தானின் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்; விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஓட்டுப் பதிவு

இவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா, 80, போட்டியிடுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆல்வா, ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்தவர். இன்று காலை 10:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு, மாலை 5:00 மணிக்கு முடியும். உடனடியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு, இரவில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

ராஜ்யசபா, லோக்சபா என இரு சபைகளையும் சேர்ந்த 788 உறுப்பினர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இது, மறைமுக தேர்தலாகவே நடக்கும். ஓட்டளிக்கும் எம்.பி.,க்கள் தங்களின் ஓட்டுச் சீட்டுகளை காட்டுவது தடை செய்யப்பட்டுஉள்ளது. அரசியல் கட்சிகளின் கொறடாக்கள், குறிப்பிட்ட வேட்பாளருக்குத் தான் ஓட்டளிக்க வேண்டும் என, தங்கள் எம்.பி.,க்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது.

பின்னடைவு

இந்த தேர்தலில், தே.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜக்தீப் தன்கருக்கு, பா.ஜ., சிவசேனா அதிருப்தி குழு, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு உள்ளது. இதில், பா.ஜ.,வுக்கு மட்டுமே லோக்சபாவில் 303, ராஜ்யசபாவில் 91 என, மொத்தம் 394 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவும் உள்ளதால், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று ஜக்தீப் தன்கர் எளிதாக வெற்றி பெறுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்கரெட் ஆல்வாவுக்கு, காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, தேசியவாத காங்., சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆதரவு உள்ளது. ஆனால், பார்லிமென்டில் அதிக எம்.பி.,க்களை வைத்துள்ள கட்சிகளில் முக்கியமானதாக கருதப்படும் திரிணமுல் காங்கிரஸ், துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்துள்ளது. இது, மார்கரெட் ஆல்வாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் பார்லி வளாகத்தில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஓட்டளித்தனர். எம்.பி.,க்கள் ஓட்டளித்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சக்கர நாற்காலியில் வந்து ஓட்டு போட்டார். எம்.பி.,க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டளித்து வருகின்றனர்.

latest tamil news
latest tamil news

ஜக்தீப் தன்கர் வெற்றி பெற்றால், நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக வரும் 11ம் தேதி பதவியேற்பார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.