மோசமான பக்கங்களை களைந்து நல்ல நோக்கங்களுக்காக மீண்டும் ஒன்றுதிரள்வோம் – ஜனாதிபதி  

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் உண்மையான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான பக்கங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனை தொடர்பில் தென்னிலங்கை பிரதம சங்கநாயக வண. கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மக்கள் பேரவையுடன் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியல் சட்டத்திற்கு விரோதமான, குண்டர் பயங்கரவாத செயல்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்  –   கலாநிதி ஓமல்பே சோபித தேரர்

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் பல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளக் கொண்டுவருவது மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதை நினைவுகூர்ந்தார்.

தேசிய மக்கள் சக்தி (ஜாதிக ஜனபல வேகய), மக்கள் விடுதலை முன்னணி ( ஜனதா விமுக்தி பெரமுன) உள்ளிட்ட சில கட்சிகளுடன் மாத்திரமே பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூறியதாவது:

“ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு குழுவினர் அல்ல. பல குழுக்கள். இவர்கள் அனைவரும் எனக்கு எதிரானவர்கள் அல்ல. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினர் இன்றும் வந்து கலந்துரையாடினர். அனைத்து அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களும் எங்களுடன் கலந்துரையாடுகிறார்கள். எதிரானவர்கள் இருக்கலாம். ஆனால் எல்லோரும் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

அவர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நான் அதை பாராட்டுகிறேன். ஆனால் சில நேரங்களில் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. நாம் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், என்னுடன் காலையில் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் வன்முறையால் போராட்டத்தை விட்டு வெளியேறினர் என்று கூறினார்கள்.  பல்வேறு அமைப்புகள் இதனைக் கூறுகின்றன.

ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து செய்த செயலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்டதொன்றல்ல. அது எங்களின் பொதுச் சொத்து. அங்கே தொலைந்து போன சில விஷயங்கள் மீண்டும் கிடைக்காது. ஜனாதிபதி மாளிகையும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கைகளில், அலரி மாளிகையும் அவர்களின் கைகளில், இறுதியாக பிரதமர் அலுவலகம் வரை அது சென்றது.  அரசாங்கத்தை எப்படி நடத்துவது. என் வீடு தீப்பிடித்து எரிந்ததுடன் அது முடிந்தது. அதையும் நாம் கண்டிக்க வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்கள் யாரும் அதனைக் கண்டிக்கவில்லை.

அடுத்து இவர்கள் பாராளுமன்றத்திற்கு வர முயற்சித்தனர்.  அங்கு வந்ததும், நான் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம் என்று கூறினேன். பின்னர் பிரதமர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கேயும் சுட வேண்டாம் என்றேன். மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்தார்கள். அங்கிருந்த பாதுகாப்புப் படையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்கச் சொன்னேன். பாராளுமன்றத்தைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது. அவர்கள் என் மீது கோபப்படலாம். ஆனால் எம்முடன் கலந்துரையாடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எதிர்காலம் ஒன்றை வழங்க வேண்டும். அவர்கள்தான் சிஸ்டம் சேன்ஜ் பற்றி பேசுகிறார்கள். அவர்களை நாம் பாராட்டுகிறோம். இப்போது நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

சட்டத்தை மீறியவர்களையும் ஏனையவர்களையும் இப்போது எப்படி தேர்ந்தெடுப்பது? இங்கு ஒரு சிக்கல் உள்ளது. ஜோசப் ஸ்டாலின் தொடர்பாக இருப்பது ஒரு சட்டரீதியான நடவடிக்கை ஆகும். நான் அவருடன் உரையாடினேன்.

போராட்டத்தால் நல்ல விடயங்களும் நடந்தன. மோசமான விடயங்களும் நடந்தன. நல்லதை மட்டும் வைத்துக்கொண்டு கெட்ட பக்கத்தை தள்ளி வைப்போம். சட்ட நடவடிக்கைகளை அமுல்படுத்துவதில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பின் கலந்துரையாடி அதனைத் தீர்த்துக்கொள்வோம்.

இங்கு உரையாற்றிய தென்னிலங்கையின் பிரதம சங்கநாயக கலாநிதி ஒமல்பே சோபித தேரர் அவர்கள்,

பாராளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. மகா ஜன சபையினால் முன்வைக்கப்பட்ட செங்கடகல அறிக்கையுடன் நீங்கள் முழுமையாக உடன்படுவதால் அதன் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் அரசியல் ஸ்திரமின்மையை நீக்கி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய பின்னரே உலக நாடுகளின் ஆதரவு எமக்கு கிடைக்கும். அது தான் உண்மை. அதுவே நமது பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீள வழி. அரசியல் ஸ்திரத்தன்மைக்காக நீங்கள் முன்வைக்கும் சர்வகட்சி வேலைத்திட்டம் தான் செங்கடகல பிரகடனத்திலும் அடங்கியுள்ளது.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்க நீங்கள் நேர்மையுடன் முயற்சி எடுப்பீர்கள் என மக்கள் நம்புகின்றனர். மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் உங்களோடு இணைந்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே எதிர்பார்க்கின்றனர்.

சட்ட விரோதமான, அரசியலமைக்கு விரோதமான, குண்டர் பயங்கரவாத செயல்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த கொடூரமான பயங்கரவாத செயல்களை நாங்கள் நிராகரிக்கிறோம். ஆனால் அமைதியான மக்கள் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாததாலேயே நடத்தப்பட்டன. அது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

எனவே முன்னெடுத்துச் செல்லப்படும் வேலைத்திட்டத்தில் பொதுமக்களை இணைத்துக்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சி ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட நீங்கள் நாட்டில் செயல்படுத்த எதிர்பார்க்கும் அமைதியான வேலைத்திட்டத்தில் இணைய நாங்கள் தயாராக உள்ளோம். நாம் கலந்துரையாடுவோம்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்கள்,

நாங்கள் எல்லாவற்றையும் சட்டப்படி செய்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அமைதிக் குழுக்கள், வன்முறைக் குழுக்கள் என்று கோடிட்டு பிரிக்க முடியாது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களில் யாரேனும் ஒருவர் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் நிரூபித்தால் அது தொடர்பில் செயற்பட முடியும்.

அங்கு கருத்துத்தெரிவித்த  சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் அவர்கள்,

இந்த துரதிஷ்டமான நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு பங்களிப்பு வழங்க முடியும் என்பதை எதிரான குழுக்கள் கூட இன்று ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் நாம் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க முடியாது. இப்படி தொடர்ந்தும் போராடும் சூழ்நிலை இன்று நாட்டில் இல்லை. நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாங்கள் எதிரானவர்களும் அல்ல எதிரிகளும் அல்ல. நாம் ஒன்றுபட்டு நாட்டுக்காக உழைக்கலாம்.

மகாசங்கத்தினர், மௌலவி சையத் அக்ரம், சிவதர்ஷக சர்மா குருக்கள் மற்றும் ஏனைய மதகுருமார்கள், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பேராசிரியர் ரொஹான் சமரஜீவ மற்றும் பலர் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-06

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.