புதுடெல்லி: இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, நாட்டின் பெருமையை கலை நயத்துடன் விளக்கும் வகையிலான இணையதள நிகழ்ச்சியை கூகுள் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை ‘ஆசாதிகா அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் ஒன்றிய அரசு ஆண்டு முழுவதும் கொண்டாடி வருகிறது. உலகின் முன்னணி தேடல் பொறி நிறுவனமான கூகுள், இந்த கொண்டாட்டத்தில் இணைந்துள்ளது. சுதந்திரத்திற்கு முன்பும், அதற்கு பிறகான இந்தியாவின் பெருமைமிக்க வளர்ச்சிக் கதைகளை, வண்ணமயமான கலை நயமிக்க ஓவியத்துடன் அது வெளியிட்டுள்ளது.ஒன்றிய கலாசார அமைச்சகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூகுளின் ‘இந்தியா கி உதான்’ எனும், இந்த இணையதள நிகழ்ச்சியின் தொடக்க விழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில், இந்தியாவின் பெருமைமிகு தலைவர்கள், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள், சாதனைப் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் அரிய புகைப்படங்களுடன் இடம் பெற்றுள்ளன. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான டூடுள் தயாரிப்பு, கூகுள் முகப்பு பக்கத்திற்கான கலை வேலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளையும் கூகுள் அறிவித்துள்ளது.அமெரிக்க பாடகிக்கு அழைப்பு: கறுப்பினத்தவரான அமெரிக்க பெண் பாடகி மேரி மில்பென், ‘ஓம் ஜெகதீஷ் ஹரே’ மற்றும் ‘ஜன கன மண’ பாடல்களை பாடி ஏராளமான இந்தியர்களை கவர்ந்துள்ளார். இந்தியா மீது மிகுந்த மதிப்பு கொண்டுள்ள அவரை கலாசார தூதராக 75வது சுதந்திர ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்க ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் தான் கவுரவிக்கப்பட்டு இருப்பதாக மில்பென் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
