மதுரை திருமங்கலத்தில் உள்ள கல்லூரியில் பாஜக சார்பில் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றும் விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அக்கட்சி தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரிசிங்க பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெரியார் சிலை குறித்து கருத்து தெரிவித்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் பேசியதில் என்ன தவறு உள்ளது? நடராஜரை இழிவுபடுத்தியவரை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒரு பெண்ணை கடத்த முயன்றுள்ளனர். தடுக்க முயன்ற பெண்ணின் தாயாரையும், சகோதரர்களையும் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.