சென்னை: தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நல்லகண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில், 2022-ம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். தனது இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தார். ஏழை மக்களுக்காக குரல்கொடுத்து, சமூக நல்லிணக்கத்தையும், சுற்றுச்சூழலையும் காக்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.
தன்னலமற்ற சிறந்த அரசியல்வாதியாகவும் செயல்பட்டு, தமிழ்நாட்டுக்கும், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு அளித்த தமிழராக விளங்குகிறார். அதனால், 2022-ம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு ஆர்.நல்லகண்ணுவை தேர்வுக் குழுவினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.நல்லகண்ணுவுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை வரும் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.
முதல் விருது, சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, நூற்றாண்டு கண்ட என்.சங்கரய்யாவுக்கு கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவன்று வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஆர்.நல்லகண்ணு இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தலைவர்கள் வாழ்த்து
ஆர்.நல்லகண்ணுவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரி வித்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: நல்லகண்ணுக்கு விருது அறிவிக்கப்பட்டது, நாடு 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கும் இத்தருணத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆற்றிய பங்கையும், தியாகத்தையும் போற்றுவதாக அமைந்துள்ளது.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: ஆர்.நல்லகண்ணு இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர். அவருக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சிறந்த கொள்கை வீரரும், எளிமையின் சின்னமுமான ஆர்.நல்லகண்ணுக்கு தமிழக அரசு சார்பில் ‘தகைசால் தமிழர் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. இதைப் பாராட்டி வரவேற்கிறோம்.