அஞ்செட்டி வனச்சரகத்தில் ஓடும் காவிரி ஆற்றின் துணை ஆறான தொட்டல்லா காட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என மலைக் கிராம விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஓசூர் வனக்கோட்டத்தில் அஞ்செட்டி மற்றும் உரிகம் வனச்சரகங்கள் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த வனச்சரகங்களின் இடையே 46 கிமீ தூரம் காவிரி ஆற்றின் துணை ஆறான தொட்டல்லா காட்டாறு ஓடுகிறது.
அஞ்செட்டியை அடுத்த குந்துக்கோட்டை மலையில் உற்பத்தியாகும் தொட்டல்லா காட்டாறு அஞ்செட்டி வழியாக ஓடி உரிகம் வனச்சரகத்தில் உள்ள ராசிமணல் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.
வெள்ளப் பெருக்கு
அஞ்செட்டி பகுதியில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் பெய்யும் கனமழையினால் தொட்டல்லா காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதும் அந்த நீர் முழுவதும் காவிரியில் கலப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
தொட்டல்லா காட்டாற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை தேக்கினால், அப்பகுதியில் உள்ள விவசாயத்துக்கும், மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் என வனத்தையொட்டியுள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
12 இடங்களில் வாய்ப்பு
இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
அஞ்செட்டி மற்றும் உரிகம் வனச்சரகங்கள் இடையே ஓடும் தொட்டல்லா காட்டாற்றின் குறுக்கே அஞ்செட்டி உள்ளிட்ட 12 இடங்களில் தடுப்பணைகள் அமைக்க வாய்ப்புள்ளது.தொட்டல்லா காட்டாற்றில் தடுப்பணை அமைக்க கடந்த 1961-ம் ஆண்டு காமராஜர் முதல் வராக இருந்தபோது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், திட்டம் நிறைவேறவில்லை.
இங்கு தடுப்பணை அமைப்பதன் மூலம் யானைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை ஆண்டு முழுவதும் பூர்த்தி செய்ய முடியும். அதேபோல, வனப்பகுதியையொட்டியுள்ள அஞ்செட்டி, சித்தாண்டபுரம், தாம்சனப்பள்ளி, கேரட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட மலைக் கிராம விவசாய நிலங்கள் பாசன வசதியும், இக்கிராமங்களில் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்.
எனவே, தொட்டல்லா காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.