நாட்டின் சுதந்திரத்தில் பாஜகவுக்கு துளியும் பங்கு இல்லை: சிபிஐ தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா விமர்சனம்

திருப்பூர்: நாட்டின் சுதந்திரத்தில் பாஜகவுக்கு துளியும் பங்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா விமர்சித்தார்.

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ம் மாநில மாநாடு இன்று தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் நிலையில், கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் டி.ராஜா திருப்பூரில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

”இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு வரும் அக். மாதம் விஜயவாடா நகரில் நடைபெறுகிறது. தற்போதைய சூழலில் இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள் மிகுந்த அரசியல் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. பாஜக அரசு மக்கள் விரோத கொள்கைகளை அரசியல் தளத்திலும், சமுக தளத்திலும் பின்பற்றுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்தியாவில் வறுமை வளர்வதாக உலக கருத்துகணிப்புகள் சொல்கின்றன. பசியுடன் மக்கள் இருப்பதாகவும், வேலைவாய்ப்பின்மை, கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும் பலரும் இன்றைக்கு ஒப்புக்கொள்கிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார்மயம் ஆக்கப்படுகின்றன. அம்பானி, அதானி போன்ற முதலாளிகளுக்கு சாதாகமாக மோடி அரசாங்கம் செயல்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் அழிக்கப்படுவதன் மூலம் சமூக நீதி தகர்க்கப்படுகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வர மோடி அரசாங்கம் தயாராகவும் இல்லை. மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிறகு, அதற்காக கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை. எல்.ஐ.சி , விமான நிலையம், வங்கி ஆகிய அனைத்துமே தனியார்மயம் ஆகி வருகின்றன. சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாத, சுதந்திரத்துக்கு துளியும் பங்கு இல்லாத பாஜக, சுதந்திரமே தங்களால் தான் கிடைத்தது போல செய்து கொள்கிறார்கள். 2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜக ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். தேர்தலுக்கு முன்னர் அனைத்து ஜனநாயக் சக்திகளும் ஒன்று சேர வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் திமுக தலைமையில் ஒன்றுபட்டதால், இங்கு பாஜகவால் வர முடியவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் இதுபோல இல்லை. அதனால் மாநில அளவில் ஜனாநயக சக்திகள் ஒன்றுபட வேண்டும். இந்தியாவின் முக்கிய ஜனநாயகமே நாடாளுமன்றம் தான். ஆனால் தற்போது அதுவும், செயல்படாத நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதே நிலை நீடித்தால், இந்தியாவின் ஜனநாயகம் மரணம் அடைவதாக அர்த்தமாகிவிடும். தமிழகத்திலும், இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பல பிரிவாக செயல்படுகிறது. காலத்தின் தேவை கருதி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தையும் இ.கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்து அரசியல் நிலையை மக்களிடம் கொண்டு செல்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.