புதுடெல்லி: மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்தித்ததின் பின்னணி குறித்து பிரதமர் விளக்க வேண்டும் என்று மேற்குவங்க மாநில பாஜக.வினர் கோரியுள்ளனர்.
மத்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பாஜக.வை கடுமையாக விமர்சிப்பவர் மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி. மேலும், மேற்கு வங்கத்துக்கு வருகை தரும்போது பிரதமர் மோடியை சந்திக்காமல் தவிர்த்து வருகிறார் மம்தா. இந்நிலையில், இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க 2 நாட்களுக்கு முன்னரே மம்தா டெல்லி வந்துவிட்டார்.
கடந்த காலங்களில் நிதி ஆயோக் கூட்டம் காணொலி வாயிலாக நடந்த போது கூட மம்தா பங்கேற்கவில்லை. அப்படி இருக்கும் போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மம்தா நேரில் டெல்லி வந்துள்ளது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அதற்கேற்ப, பிரதமர் மோடியை அவர் நேற்றுமுன்தினம் நேரில் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, மேற்குவங்க மாநிலத்துக்கு செயல்படுத்தி வரும் மத்திய அரசு திட்டங்களுக்கான நிதிகளை குறித்த நேரத்தில் ஒதுக்க வேண்டும். மாநிலத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனடியாக அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் மம்தா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், முதல்வர் மம்தா அரசில் கல்வித் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, ஆசிரியர் ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். இவருக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ரூ.50 கோடி ரொக்கத்தை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். அத்துடன், சட்டர்ஜி, அர்பிதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் தற்போது சிறையில் உள்ளனர். இந்நிலையில், ஊழல் புகாரில் தற்போது மேலும் ஒரு மாநில அமைச்சர், அமலாக்கத் துறை விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், பிரதமரை மம்தா சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? சந்திப்பின் பின்னணி என்ன? இதுகுறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்று தற்போது மேற்கு வங்க பாஜக.வினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் தத்தாகாட்டா ராய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்த சந்திப்பு குறித்து மேற்கு வங்கத்தில் பல விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த சந்திப்பில் மேற்குவங்க ஊழல் விவகாரத்தில் ரகசிய உடன்படிக்கை ஏற்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. இது உண்மையானால் திரிணமூல் காங்கிரஸின் கொலை குற்றவாளிகளும், திருடர்களும் சுதந்திரமாக உலவ தொடங்குவார்கள். எனவே, இந்த சந்திப்பில் எந்த ரகசியமும் இல்லை என்பதை பிரதமர் மோடி உறுதிப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மம்தாவை நம்ப கூடாது
பாஜக.வின் மற்றொரு மூத்த தலைவர் திலீப் கோஷ் கூறும்போது, ‘பிரதமர் மோடியை சந்தித்ததன் மூலம் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது’ என்று வெளியில் செய்தி பரப்புவார். மம்தாவின் அந்த வலையில் மத்திய அரசு எந்த வகையிலும் சிக்கிவிட கூடாது” என்று தெரிவித்துள்ளார்.