புதுச்சேரியை சேர்ந்த ராணுவ வீரர்ஜம்மு – காஷ்மீரில் விபத்தில் மரணம்

ஜம்மூ காஷ்மீரில் நடந்த வாகன விபத்தில், புதுச்சேரியை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்தார்.

புதுச்சேரி, பாப்பாஞ்சாவடியை சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் புரோஸ்பர் பிரான்சிஸ்.45; டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்த இவர், கடந்த1996ம் ஆண்டு, இந்திய ராணுவத்தில், பெங்களூரு 15வது இன்ஜினியர் ரெஜிமென்ட்டில் பணியில் சேர்ந்தார். தற்போது ஜம்மூ காஷ்மீரில் 54வது இன்ஜினியர் யூனிட்டில் ஜூனியர் கமிஷன்ட்டு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.இவர் கடந்த 23ம் தேதி இரவு 9:௦௦ மணிக்கு தங்கள் பிரிவுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு ஜீப்பில் சக வீரர்களுடன் ஜம்முவில் இருந்து உதன்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அபாய வளைவில் எதிரே வந்த ட்ரக் மோதியது. இதில் படுகாயமடைந்த புரோஸ்பர் பிரான்சிஸ் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு இறந்தார்.அவரது உடல் இன்று விமானம் மூலம் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டு, பாப்பாஞ்சாவடியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.மாலை 4.௦௦ மணிக்கு வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு முருங்கப்பாக்கம் சவேரியார் சர்ச்சில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. பின்னர் முருங்கப்பாக்கம் கல்லறையில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.கார்கில் உள்ளிட்ட பல போர்களில் பணியாற்றிய புரோஸ்பர் பிரான்சிற்கு ஜூலியட் மேரி,42; என்ற மனைவியும், ஹாரிசன் பிரான்சிஸ்,17; என்ற மகனும், , ஆண்ட்ரூஷியா,12; என்ற மகளும் உள்ளனர். இருவரும் ஜிப்மர் கேந்திரிய வித்யாலயாவில் முறையே பிளஸ் 2 மற்றும் 6 ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

ராணுவ குடும்பம்

இறந்த புரோஸ்பர் பிரான்சிசின் தந்தை அந்தோணிசாமி, ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்று, 62ம் வயதில் மாரடைப்பால் இறந்தார். புரோஸ்பர் பிரான்சிஸ் அண்ணன் மரிய பெர்னார்டு,47; ராணுவத்தில் சுபேதராக பணியாற்றி கடந்தாண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.