புதுடெல்லி: எல்லையில் உள்ள படையினருடன் தகவல் தொடர்பை மேம்படுத்த, 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
தொலைதொடர்பு துறையில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் சமீபத்தில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு நடந்தது. இதனால் தகவல் தொடர்பில், 5ஜி தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்புபடைகளில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் பரிந்துரைகளை ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை பரிசீலித்து வருகின்றன. எல்லைப்பகுதிகளில் உள்ள படையினருடன் முக்கியமான தகவல் தொடர்புக்கு 5ஜி தொழில்நுட்பம் சிறப்பாக இருக்கும் என இந்திய ராணுவம் கூறியுள்ளது.
எனவே, 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும்போது, அதை எல்லையில் உள்ள படையினரின் தகவல் தொடர்புக்கு பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.