வேலூர் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறது பொருளாதாரக் குற்றப்பிரிவு. பல ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் சுருட்டியிருக்கிறார்கள் என அந்த நிறுவனத்தை நடத்திவந்த சகோதரர்கள் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேத நாராயணன், மோகன்பாபு மீது புகார்கள் வரிசைக்கட்டுகின்றன. மோகன்பாபுவை தவிர்த்து மற்ற மூவரும் உடன்பிறந்த சகோதரர்கள். மோகன்பாபு, அவர்களின் சொந்த சித்தப்பா மகன். குடும்பமே கூட்டுசேர்ந்து, கோடி கோடியாக சுருட்டிய ‘சதுரங்க வேட்டை’ குறித்து ஜூ.வி-யிலும், நாணயம் விகடனிலும் தொடர் கட்டுரைகள் வெளியாகின.
இதற்கிடையில்தான், ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள் குடும்பத்தோடு தலைமறைவாகினர். ‘டீம்’ லீடர்கள் எனப்படும் ஏஜென்ட்டுகளும் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஓட்டம் பிடித்து விட்டார்கள்.

இந்த நிலையில், ஐ.எஃப்.எஸ் மோசடி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு, ‘ஐ.எஃப்.எஸ் நிறுவனம்மீது வழக்குப் பதிவு செய்ய’ உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் 10 பிரிவுகளின்கீழ் ஐ.எஃப்.எஸ் மீது வழக்குப் பதிவு செய்தனர். கையோடு, ஆகஸ்ட் 5-ம் தேதியன்றே ஐ.எஃப்.எஸ் தொடர்பான அனைத்து இடங்களிலும் ரெய்டு அடித்தனர். வேலூர் காட்பாடியிலிருக்கும் தலைமை அலுவலகம் மற்றும் லட்சுமி நாராயணன் சகோதரர்களின் வீடுகள், ஏஜென்ட்டுகளின் வீடுகள் தொடங்கி ஆற்காடு, நெமிலி, அரக்கோணம், காஞ்சிபுரம் என சுமார் 21 இடங்களில் சோதனை படலம் தொடர்ந்தது. ஐ.எஃப்.எஸ் சகோதரர்களின் வீடுகள், அலுவலகங்களின் கதவுகள் அடைக்கப்பட்டு பூட்டுகள் மட்டுமே தொங்கிக் கொண்டிருந்தன.
ஏஜென்ட்டுகளின் வீடுகளில் பெற்றோர்கள், பிள்ளைகள் இருந்தனர். காட்பாடியிலிருக்கும் லட்சுமி நாராயணன் வீட்டுக்கு ‘சீல்’ வைத்த பொருளாதாரக் குற்றப்பிரிவினர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 இன்னோவா கார்களை வழக்குக்குத் தொடர்புடைய சொத்துக்களில் சேர்த்து, பறிமுதல் செய்தனர். இந்த 2 கார்களும் பவுன்சர்கள் பயன்படுத்தியது. அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வெங்கடேசபுரத்தில் மோகன்பாபு நடத்திவந்த அலுவலகக் கிளை மற்றும் அவரின் வீட்டுக் கதவை கடப்பாரையால் உடைத்து சோதனை செய்தனர். இதையடுத்து, மோகன் பாபுவின் அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் சீல் வைத்தனர்.

அரக்கோணம் அருகேயுள்ள நெமிலி காமராஜர் தெருவில் வசிக்கும் லட்சுமி நாராயணனின் நேரடி உதவியாளரான ஜெகன்நாதன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும் ரூ.7 லட்சம் ரொக்கப் பணம், 3 காசோலை புத்தகங்கள், 45 பாண்டு பத்திரங்கள், 5 பென்டிரைவ்கள், ஹார்ட் டிஸ்க், லேப் டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். மோகன்பாபுவின் நண்பரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரின் வீட்டுக்கும் சீல் வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ஐ.எஃப்.எஸ்-சில் ரூ.50 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்திருந்த காட்பாடி சேவூர் கிராமத்தைச் சேர்ந்த வீர ராகவன் என்பவரின் மகனும் ஏஜென்ட்டுமான வினோத்குமார் நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர், ரூ.1 லட்சத்துக்கு 8 ஆயிரம் ரூபாய் வட்டித் தருவதாகக் கூறி நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் பணம் வசூலித்து, ஐ.எஃப்.எஸ்-சில் கொடுத்திருக்கிறார். இரண்டு மாதங்களாக ஐ.எஃப்.எஸ்-சில் இருந்து பணம் கொடுக்கப்படாததால், முதலீட்டாளர்களிடம் பதில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறார். இந்தச் சூழலில் ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள் தலைமறைவு, பொருளாதாரக் குற்றப்பிரிவு ரெய்டு என அடுத்தடுத்து தகவல்கள் வந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் தனது உயிரை மாய்த்து கொண்டதாக காவல் துறை தரப்பில் சொல்கிறார்கள்.

தற்கொலைக்கு முன்பு வினோத்குமார் கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருக்கிறார். அந்தக் கடிதத்தில், ‘‘லட்சுமி நாராயணன், மோகன் பாபு, வேத நாராயணன், ஜனார்த்தனன் மற்றும் டீம் லீடர் (ஏஜென்ட்) டெல்லி பாபு ஆகியோரின் பெயரில் இயங்கும் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில், பலரது பணத்தை வாங்கி நானும் முதலீடு செய்திருக்கிறேன். இப்போது, இவர்கள் இல்லை என்பதால் என்னைச் சார்ந்தவர்களின் பணத்தை வாங்கி கொடுக்கும்படி விசாரணை நடத்தும் துறையிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் கொடுத்தப் பணத்துக்கான ஆவணங்கள் அனைத்தும் என் ஆன்லைன் புக்கில் உள்ளது. என்னை நம்பியவர்களுக்கு எனது முடிவிலாது பணம் கிடைக்கட்டும். சாரி டு ஆல்..! டாக்குமென்ட்ஸ் என்னுடைய பேக்கில் இருக்கிறது. போலீஸ் கண்டுபிடித்து, அனைவரின் பணத்தையும் வாங்கித்தர வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த கடிதத்தை வினோத்குமார் தான் எழுதினார் என்பதற்கான ஆதாரமாக தற்கொலைக்கு முன்பு அந்த கடிதத்துடன் அவர் செல்ஃபி புகைப்படம் ஒன்றையும் தனது செல்போனில் எடுத்திருக்கிறார். இவற்றையெல்லாம் கைப்பற்றியிருக்கும் திருவலம் (காட்பாடி) போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.