திருச்சி: 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால், எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
திருச்சி விமானநிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலிமையுடன் முன்னேறி சென்றுகொண்டிருக்கிறது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால், எதிர்கொள்ள தயாராக உள்ளோம். திமுக, காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம், அவர்களின் குடும்பத்தை வளர்ப்பதுதான். அவர்களின் முழு நேர வேலையே ஊழல் செய்வது மட்டும்தான். ஆனால், மக்களுக்கான திட்டம்தான் பாஜகவின் குறிக்கோள்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜகநாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. அவரைப்பார்த்து எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, அனைத்துக் கட்சிகளும் பயப்படுகின்றன. 4 பேரை வைத்துக்கொண்டு பாஜக இயங்கிக் கொண்டிருக்கிறது என மறைந்த முன்னாள் பிரதமர் நேரு முன்பு ஒருமுறை கூறினார். ஆனால், தற்போது மொத்த நாடும் எங்களுக்கு பின்னால் உள்ளது என்றார்.