சென்னை: ஆமிர்கான் நடித்துள்ள “லால் சிங் சத்தா” இந்தி திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் வெளியிடுவது குறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியலைவிட தொழிலே பிரதானம் என்பது இதுதானோ என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஆமிர்கான், கரீனா கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ” லால் சிங் சத்தா”. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவுள்ளது. பாரஸ்ட் கம்ப் என்ற ஆங்கிலப் படத்தின் ரீமேக்காக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுகிறார். தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின், இந்தி திரைப்படத்தை வாங்கி வெளியிடுவது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில், ” தாத்தாவும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி, இந்தி மொழியை தமிழகத்தில் எந்த வடிவிலும் நுழைய அனுமதிக்கமாட்டோம் என்றார்.
அவரது பெயரனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், ஆமிர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா என்ற இந்திப் படத்தை தமிழகம் முழுவகும் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளார். அரசியலைவிட தொழிலே பிரதானம் என்பது இதுதானோ” என்று பதிவிட்டுள்ளார்.