ரஜினியின் கைக்கு போகும் அதிமுக… திமுகவை வீழ்த்த பாஜக மாஸ்டர் பிளான்?

போர் வரட்டும்… புரட்சி வெடிக்கட்டும்…என்றெல்லாம் பஞ்ச் டயலாக் பேசி, தனது ரசிகர்களை உசுப்பேத்தி அவர்களுக்கு அரசியல் ஆர்வத்தை மூட்டிய ரஜினிகாந்த், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், தமது உடல்நிலையை காரணங்காட்டி தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றினார்.

ஆளுநருடன் திடீர் சந்திப்பு:
ரஜினியின் அந்த அறிவிப்புக்கு பிறகு, எல்லாரும் போய் அவங்க அவங்க பேரன்,பேத்திகளை நல்லா படிக்க வையுங்கய்யான்னு டயலாக் பேசாத குறையாக நொந்துப் போயிருந்த அவரது ரசிகர்களுக்கு மீண்டும் அரசியல் ஆசையை தூண்டும் விதமாக இன்றொரு சம்பவத்தை நிகழ்த்தி உள்ளார் சூப்பர் ஸ்டார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று திடீரென் சந்திந்த ரஜினி, மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் அவருடன் அரசியலும் பேசியதாக கூறி, தமிழக அரசியலில் நெருப்பை பற்ற வைத்துள்ளார்.

ரஜினி கைக்கு வரும் அதிமுக?:
இபிஎஸ்- ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ள அதிமுகவை ரஜினியின் கைக்கு கொண்டு வரும் பாஜகவின் மாஸ்டர் பிளானின் ஆரம்பம்தான் ஆளுநருடனான அவரது இன்றைய. சந்திப்பு என்று தமிழக அரசியல் அரங்கில் பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னரே கொஞ்ச காலம் அதிமுக ஓபிஎஸ் -இபிஎஸ் என இரு அணிகளாகவே பிரிந்துதான் இருந்தது. அப்போது இருதரப்பையும் சமாதானம் செய்து வைத்து இபிஎஸ் தலைமையில் நான்காண்டு காலம் செவ்வென அதிமுக ஆட்சி நடைபெற வழிவகுத்தது பாஜக என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால், அதே பாஜக இன்று ஒற்றைத் தலைமை யுத்தத்தால் மீண்டும் இரண்டுபட்டு கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சிக்காது ஏன் என்ற கேள்வியின் பின்னணியில்தான் ரஜினியின் அரசியல் ரீஎன்ட்ரி முக்கியத்துவம் பெறுகிறது.

இபிஎஸ்சின் நம்பகத்தன்மை கேள்விக்குறி:
ஓபிஎஸ்ஸுடன் இனி சமாதானமாக போவதற்கு வாய்ப்பே இல்லை என்று பாஜகவின் டெல்லி மேலிடத்திடமே இபிஎஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்ட நிலையில், பாஜகவுக்கு எப்போதும் போல் ஓபிஎஸ் மீது கரிசனம் இருந்து வருகிறது. அத்துடன் தம்மை முதல்வரா்க்கிய சசிகலாவுக்கும், நான்காண்டுகள் முதல்வர் பதவியில் நீடிக்க முழு ஒத்துழைப்பு அளித்த ஓபிஎஸ்ஸுக்கும் விசுவாசமாக இல்லாமல், சந்தர்ப்பம் பார்த்து இருவரையும் கழற்றிவிட்டு இன்று கட்சியின் பொதுச் செயலாளராக ஆகியிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நம்பகத்தன்மை மீது பாஜக தலைமைக்கு பெருத்த சந்தேகம் உள்ளதாம்.

எனவே அதிமுகவில் தற்போதுள்ள பிளவைப் பயன்படுத்தி கட்சியின் மிகப்பெரிய பலமாக உள்ள இரட்டை இலை சின்னத்தை முடக்கி, இபிஎஸ் அன்கோவை தனிமைப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம். அத்துடன் இபிஎஸ்சின் இடத்துக்கு ரஜினியை கொண்டு, ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை அவருடன் ஒருங்கிணைந்து செயல்பட வைப்பதன் மூலம் ஒட்டுமொத்த அதிமுகவையும் ரஜினிியின் கைக்கு கொண்டு வருவதுதான் பாஜகவின் மாஸ்டர் பிளான் என்கின்றனர் அரசியல் விவரம் அறிந்தவர்கள்.

திமுக வீழ்த்த திட்டம்?:
அப்படி ரஜினியின் கட்டுப்பாட்டில் அதிமுக வந்துவிட்டால், ஸ்டார் அந்தஸ்துடன் அக்கட்சி மீண்டும் பலம் பெற்றுவிடும். அதனுடன் கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை காலி செய்துவிட்டு தமிழகத்தில் வேரூன்றிவிடலாம் என்பதுதான் பாஜகவின் தொலைநோக்கு திட்டமாம்.

திட்டம் என்னமோ நல்லாதான் இருக்கும்… ஆனால் எம்ஜிஆர். ஜெயலலிதா இடத்தில் வைத்து ரஜினியை அதிமுக தொண்டர்கள் பார்ப்பார்களா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.