சிங்கப்பூரில் இருந்து தினமும் வீடியோ கால் பேசி மனைவியை வேவு பார்த்த கணவனின் விபரீத செயல் தெரியவந்த நிலையில் குற்றமற்றவள் என்பதை நிரூபித்த மனைவி உயிரைமாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம் நாகர்கோவில் அருகே அரங்கேறி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஞானபாக்கியபாய் , கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
சிங்கப்பூரில் இருந்து தினமும் நள்ளிரவில் செந்தில் தனது மனைவியுடன் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசு வது வழக்கம். அந்தவகையில் கணவர் செந்திலுடன் திங்கட்கிழமை இரவு ஞானபாக்கியம் வாட்ஸ்-அப் வீடியோகாலில் பேசிக்கொண்டிருந்தார்.
பணத்தை சேமிப்பதா? அல்லது நிலம் வாங்கிப் போடுவதா? என்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியின் பின்னால் யாரோ மறைந்திருப்பதாக சந்தேகித்த செந்தில் மனைவியை செல்போன் காமிராவை அறை முழுவதும் தெரியுமாறு காண்பிக்க கூறி உள்ளார்.
உடனடியாக மனைவி படுக்கை அறையை முழுமையாக காண்பித்த நிலையில் சந்தேகம் தீராத செந்தில், மனைவியிடம் செல்போன் கேமராவை கட்டிலுக்கு அடியில் திருப்பி காண்பிக்குமாறு கூறி சண்டையிட்டுள்ளார்.
கணவர் தன் நடத்தையில் சந்தேகப்படுவதை அறிந்த ஞானபாக்கியம், கட்டிலுக்கு அடியிலும் எவரும் இல்லை என்பதை வீடியோ மூலமாக காண்பித்ததாக கூறப்படுகின்றது. சந்தேகக் கணவருடனான வாட்ஸ் அப் வீடியோ கால் இணைப்பை துண்டித்த கையோடு , செல்போனை கீழே போட்டு விட்டு ஞானபாக்கியம் கதறி அழுத்துள்ளார்.
மனைவி இணைப்பை துண்டித்ததால அவரை சமாதனப்படுத்த பல முறை செல்போனில் அழைத்துள்ளார் செந்தில் , ஆனால் கடுமையான மன உளைச்சளுக்குள்ளான ஞானபாக்கியபாய் கணவரது அழைப்பை ஏற்க வில்லை.
இந்த நிலையில் அதிகாலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர்களை செல்போனில் அழைத்த செந்தில், இரவு பேசும் போது மனைவியுடன் தகராறு ஏற்பட்டதை கூறி, தற்போது மனைவி செல்போனை எடுக்க மறுப்பதாக விவரித்து வீட்டில் சென்று பார்க்குமாறு கூறி உள்ளார்.
உடனே அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் செந்திலின் வீட்டு கதவை தட்டிப்பார்த்திள்ளனர். எவரும் திறக்காத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஞான பாக்கியபாய் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது.
உடனே இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே நேரத்தில் ஆத்திரக்கார தந்தையின் சந்தேகத்தால் , தாய் உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதத்தால் அவர்களது இரண்டு குழந்தைகளும் ஆதரவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.