வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தைபே : “சீனாவின் முயற்சி பலிக்காது; நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம்,” என, தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ கூறினார்.தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, நான்சி வந்து சென்ற மறுநாளில் இருந்து, தென் சீன கடலில், தைவான் ஜலசந்தியில் போர் பயிற்சியை துவக்கியது.’பயிற்சி நான்கு நாள் நடக்கும்’ என, முதலில் அறிவித்த சீனா, அதை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில், தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ நேற்று கூறியதாவது:தைவான் ஜலசந்தியில், போர் பயிற்சி என்ற பெயரில் சீனா எங்களை அச்சுறுத்தி வருகிறது.

தைவானுக்கு மற்ற நாடுகள் உதவி செய்வதை தடுக்க திட்டமிடும் சீனா, கிழக்கு மற்றும் தென் சீன கடல் பகுதியை, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. தைவானில் இருந்து சில உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. தைவானை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வரும் சீனாவின் முயற்சி பலிக்காது. நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம். தைவான் ராணுவத்தின் தயார் நிலையை சோதனை செய்யும் பயிற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement