சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு செய்தார்.
சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்புப் பாடலில் அணிந்து இருந்த கருப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்று இருந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு அளித்து சிறப்பு செய்தார். இதன்படி முதல் கிராண்ட மாஸ்டர் மானுவல் ஆரோன், தலைமைச் செயலாளர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாடளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி முதல்வர் சிறப்பு செய்தார்.