சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்புப் பாடலில் அணிந்து இருந்த கருப்பு உடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவு விழாவில் கலந்துகொண்டார்.
சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கமும், அர்மீனியா வெள்ளியும், இந்தியா பி வெண்கலமும் வென்றது. மகளிர் பிரிவில் உக்ரைன் தங்கமும், ஜார்ஜியா வெள்ளியும், இந்திய மகளிர் ‘ஏ’ வெண்கலமும் வென்றது.
தனிநபர் பிரிவில் இந்திய வீரர்கள் குகேஷ் மற்றும் சரின் நிகல் தங்கப் பதக்கம் வென்றனர். அர்ஜுன் எரிகாசி வெள்ளியும், பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனர். மகளிர் பிரிவில் வைஷாலி, தானியா, திவ்யா ஆகியோரும் வெண்கலம் வென்றார்.
இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்பு பாடலில் அணிந்து இருந்த கருப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.