சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று வரை 25 நாட்களாக 120 அடியாக நீடித்து வருகிறது. கடந்த ஜூலை 12-ம் தேதி முதல் இன்று வரை 30 நாட்களில், அணைக்கு 210 டிஎம்சி நீர் வந்துள்ளது. அணையில் இருந்து உபரி நீராக காவிரி ஆற்றில் 150 டிஎம்சி வெளியேற்றப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்துள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1.45 லட்சம் கன அடியாக நீர்வரத்து இருந்தது. இன்று காலை 8 மணி வரை விநாடிக்கு 1.45 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, மதியம் 12 மணிக்கு விநாடிக்கு 1.40 லட்சம் கன அடியாக சரிந்தது.
இதனையடுத்து, அணையின் 16 கண் மதகு வழியாக விநாடிக்கு ஒரு லட்சத்து 17 ஆயிரம் கன அடியும், நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி என மொத்தம் விநாடிக்கு 1.40 லட்சம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1.40 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதை அடுத்து, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர் மட்டம் கடந்த மாதம் 16-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து இன்று 25 நாட்களாக அணை நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. கடந்த ஜூலை 12ம் தேதி முதல் இன்று வரை 30 நாட்களில், அணைக்கு 210 டிஎம்சி நீர் வந்துள்ளது. அணையில் இருந்து உபரி நீராக காவிரி ஆற்றில 150 டிஎம்சி வெளியேற்றப்பட்டுள்ளது.