7 கட்சிகளின் ஆதரவுடன் 8வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ் பதவியேற்பு: துணை முதல்வரானார் தேஜஸ்வி

பாட்னா: பாஜ.வை கழற்றி விட்டு, மெகா கூட்டணியுடன் புதிய அரசு அமைத்த நிதிஷ் குமார், பீகார் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். பீகாரில் பாஜ உடனான மோதலைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொள்வதாக நேற்று முன்தினம் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அவர், அடுத்த சில மணி நேரத்தில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மெகா கூட்டணியுடன் இணைந்து, 164 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நேற்று மதியம் 2 மணிக்கு பதவியேற்பு விழா ஆடம்பரமின்றி நடந்தது. இதில், பீகார் முதல்வராக 8வது முறையாக நிதிஷ் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவியேற்றார். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறும் என கூறப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் பாஜ வகித்த துறைகள் ஆர்ஜேடிக்கு ஒதுக்கப்படும். அமைச்சரவையில் குறைந்தபட்சம் 35 பேர் இடம் பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய அரசு பதவியேற்பு விழாவை பாஜ புறக்கணித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.