புதுச்சேரி: புதுச்சேரி – கடலுார் இடையே ரயில் போக்குவரத்து திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, திட்ட வரைவுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது என கவர்னர் தமிழிசை பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட்கூட்டத் தொடர் உரையில் அவர் பேசியதாவது: புதுச்சேரி – கடலுார் இடையே ரயில் போக்குவரத்து திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, திட்ட வரைவுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. இதில் இறுதிநிலை வழித்தட அளவீடு செய்யும் திட்டப்பணிகளை தயாரிக்கவும், மண் தர ஆய்வு மேற்கொள்ள தெற்கு ரயில்வே ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளது.
காரைக்கால் மாவட்டம் பேரளத்திலிருந்து அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு பணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே உள்ள பாதையில் தளம் அமைக்கவும், சுரங்கப்பாதை, மேம்பாலம், சிறிய, பெரிய பாலங்கள் அமைக்க தென்னக ரயில்வே ஒப்பந்தம் இறுதி செய்துள்ளது. ரயில் நிலைய கட்டடம், லெவல் கிராசிங், பிற கட்டடங்களுக்கு ஒப்பந்தம் தயார் நிலையில் உள்ளது.
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 11 குழந்தைகள் மற்றும் தாய், தந்தையரில் ஒருவரை இழந்த 378 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களின் மறுவாழ்விற்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
பெற்றோரை இழந்த 11 குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவியாக, பிரதமரின் குழந்தைகள் அரவணைப்பு என்ற இணைய முகப்பில் பதியப்பட்டு, இவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்து திருமணங்களை தாமதமாக பதிவு செய்வதில் உள்ள நடைமுறைகளை எளிதாக்கும் விதமாக, புதுச்சேரி இந்து திருமண பதிவு விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விதிகளின்படி, திருமணமான 15 ஆண்டுகள் வரை இந்து திருமணங்களை பதிவு செய்யலாம். திருமண நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மேல் 40 ஆண்டுகள் வரை பதிவு செய்வதில் தாமதமானால் அதற்கு சிறப்பு அனுமதி வழங்க மாவட்ட பதிவாளருக்கும், 40 ஆண்டுகளுக்கு மேல் தாமதமானால் வருவாய் சிறப்பு செயலருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மாணவர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. அதன்படி 900 மருத்துவக் கல்லுாரி மாணவர்கள், 7,290 இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள், 1024 செவிலியர் கல்வி மாணவர்கள் என மொத்தம் 9,214 மாணவர்களுக்கு 40 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement