பியாங்யாங் :’வட கொரியாவில் சமீபத்தில் தீவிரமடைந்த கொரோனா பரவலின் போது, என் சகோதரரும், அதிபருமான கிம் ஜாங் உன் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
வைரசை திட்டமிட்டு பரப்பிய தென் கொரியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்’ என, கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் மிரட்டி உள்ளார்.கிழக்காசிய நாடான வட கொரியா, உலக நாடுகளுடன் நட்பு பாராட்டாமல் தனித்து செயல்பட்டு வருகிறது. இங்கு நடக்கும் சம்பவங்கள் வெளி உலகுக்கு வந்து சேருவதில்லை. உலகம் முழுதும் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட போது, ‘வட கொரியாவில் மட்டும் வைரஸ் பரவல் இல்லை’ என, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்தார்.கிம் பொய் சொல்கிறார் என்றும், அந்நாட்டில் தொற்று உச்சத்தில் உள்ளது; கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும், பல்வேறு நாடுகள் குற்றஞ்சாட்டின.
இந்நிலையில், வட கொரியாவில் கடந்த மே மாதம் ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா வைரஸ் பரவியதாக அந்நாடு ஒப்புக் கொண்டது. ஆனால் பாதிப்பு நிலவரம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இங்கு போதுமான அளவு பரிசோதனை கருவிகள் இல்லை. இங்கு ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் இல்லை. இந்நிலையில், சமீபத்தில் நடந்த பொது கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் பேசியது குறித்து அந்நாட்டு அதிகாரப்பூர்வ நாளிதழ் வெளியிட்ட செய்தி குறிப்பு:தென் கொரிய அதிகாரிகள் பலுான்களில் துண்டு பிரசுரங்களை இணைத்து அதை எல்லையில் பறக்கவிட்டனர்.
அதில் வைரஸ் கிருமிகள் இருந்துள்ளன. அதை தொட்ட பின் தான் வட கொரிய மக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகினர்.அதிபர் கிம் ஜாங் உன் கூட கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆனாலும் அவர் வீட்டில் முடங்காமல் பணியாற்றினார். எதிரிகள் இதுபோன்ற விஷமத்தனங்களை தொடர்ந்தால் வைரசை ஒழிப்பது மட்டுமின்றி தென் கொரியாவையே ஒழித்து விடுவோம்.இவ்வாறு அவர் பேசியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த மாதம் 17 நாட்கள் மாயமானார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவர் எங்கு இருந்தார் என்பதும் தெரியவில்லை. அதன் பின், கடற்கரை பகுதியில் உள்ள பங்களாவில் அவர் ஓய்வு எடுக்கும் செய்தி வெளியானது. இந்நிலையில், ஆளுங்கட்சியினர் நடத்திய கூட்டத்தில் நேற்று முன் தினம் பங்கேற்றார். அப்போது, ‘நாட்டில் கொரோனா தொற்று பரவல் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது.
கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம். கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படுகின்றன. இது சர்வதேச மருத்துவத்துறையில் நடந்த அதிசயம்’ என தெரிவித்தார்.வட கொரியாவின் குற்றச்சாட்டை தென் கொரிய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ‘வட கொரியாவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. முட்டாள்தனமானது’ என, தென் கொரியா தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement