ஆசிய கோப்பையை தட்டி தூக்குவாரா ரோகித் சர்மா? எப்படி இருக்கிறது இந்திய அணி? – முழு அலசல்

2022 ஆம் வருடத்திற்கான ஆசிய கோப்பை தொடர் இந்த மாத இறுதியில் தொடங்கி நடைபெற உள்ள நிலையில் ரோகித் சர்மா தலைமையில் சிறந்த முறையில் விளையாடி வரும் இந்திய அணி இந்த முறை ஆசிய கோப்பையை வெல்லும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னால் கிரிக்கெட் வீரர்களின் ஆசிய கோப்பையை வெல்லும் விருப்ப அணியாக இந்தியா இருக்கிறது. இதற்கு முன்பு 2021 டி20 உலககோப்பைக்கான விருப்ப அணியாக இந்தியா இருந்த நிலையில் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுடன் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் திணறி படுதோல்வி அடைந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் திரும்பியது. அதன் காரணமாக இப்போது இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா காயத்தின் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கு பெறாத நிலையில் இன்னும் ஜாக்கிரதையாக இந்தியா இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
ஆசிய கோப்பை :
1984 ல் தொடங்கிய ஆசிய கோப்பை இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 14 முறை நடைபெற்று இருக்கும் ஆசிய கோப்பை தொடர்களில் இந்தியா 7 முறை ஆசிய கோப்பையை வென்று ஆசிய கோப்பையின் சிறந்த அணியாக இருக்கிறது. தொடர்ந்து இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் அணி 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன. ஆசிய கோப்பையில் டி20 தொடர் முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு தான் விளையாடப்பட்டது. 2016 ஆம் ஆண்டு நடந்த டி20 தொடரில் இறுதி போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொண்டு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய கோப்பை டி20 தொடர் இந்த ஆண்டு 2022 ல் இப்போது தான் நடக்கவிருக்கிறது.
image
இந்திய அணியின் ‘பாசிட்டிவ்’
இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் 2018ல் ஆசிய கோப்பையை வென்றுள்ளது. மேலும் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா 31 டி20 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் அதில் 26 போட்டிகளை வென்றுள்ளது. தொடர்ந்து ரோகித் தலைமையில் 2022ல் நடந்த 3 டி20 தொடர்களிலும் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளை வென்று இந்தியா சிறந்த வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இந்திய பந்துவீச்சு எப்படி?
சமீபத்தில் இந்தியாவின் பந்துவீச்சு டி20 போட்டிகளில் சிறப்பாகவே இருந்து வருகிறது. இந்தியாவின் டெத் பவுலிங்க் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்படும் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா இல்லாத சுழ்நிலையிலும் இந்திய அணி கடைசிகட்ட ஓவர்களில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. பெரிய இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்குள் வந்திருக்கும் மூத்த பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் பவர் ப்ளே என்று அழைக்கப்படும் முதல் ஐந்து ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் புவனேஷ் குமார். புதிதாக அணிக்குள் சேர்க்கப்பட்டு இருக்கும் இளம் பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் டெத் ஓவர்களில் நுணுக்கமான பந்துகளை வீசி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் மிடில் ஓவர்களில் கூடுதல் பலமாக ஜடேஜா, அஸ்வின் மற்றும் லெக் ஸ்பின்னர் சாஹல் இருக்கின்றனர்.
இந்திய பேட்டிங் எப்படி?
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்த வரையில் தொடக்கத்தில் இறங்கி விளையாடும் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். சமீபத்தில் டி20 போட்டியில் 100 ரன்கள் அடித்த அவர் டி20 தரவரிசையிலும் 2வது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மிடில் ஆர்டரில் தீபக் கூடா மற்றும் ரிசப் பண்ட் இருவரும் சிறப்பாக ஆடி தருகின்றனர். கடைசிகட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடி விளையாட்டின் போக்கையே மாற்றும் விதமாக ஹர்திக் பாண்டியா மற்றும் சமீபத்தில் ஃபினிசிங் அவதாரம் எடுத்திருக்கும் தினேஷ் கார்த்திக் இருவரும் இருக்கின்றனர். மேலும் பலம் சேர்க்க கேப்டன் ரோகித் சர்மா, கேஎல்ராகுல் மற்றும் சமீபக காலங்களில் சரியான ஆட்டத்தை வெளிகாட்டாமல் இருக்கும் விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டும் முனைப்பில் உள்ளார்.
இந்தியாவின் வீக்னஸ் :  
image
பந்துவீச்சில் புவனேஷ் குமார் மற்றும் அர்ஸ்தீப் சிங் சிறப்பாக ஆடி வரும் வேலையிலும் தொடர்ந்து சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார் இந்தியாவின் இளம் பந்து வீச்சாளரான ஆவேஸ் கான். இருக்கும் மற்ற பவுலர்கள் நன்றாக செயல்பட்டாலும் ஒரு பவுலர் சரியில்லை என்றால் கூட ஆட்டத்தின் போக்கே மாறிவிடும் கிரிக்கெட் வடிவம் தான் இந்த டி20 ஃபார்மேட். அப்படி இருக்கும் நிலையில் ஐபில் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டிய ஆவேஸ் கான் இந்திய அணியில் இடம்பெற்ற பின்பு இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிகாட்டாமல் சொதப்பியே வரும் நிலையில் அவருடைய பார்ம் நமக்கு கவலையே தருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அதிக ரன்களை விட்டுகொடுத்து கவலையளித்தாலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கடைசி ஓவரில் 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இடத்தில் 2 விக்கெட்டுகள் எடுத்து 4 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து வெற்றியை தேடித் தந்தார். இருப்பினும் ஏற்ற இறக்கமான ஆட்டத்தையே வெளிகாட்டும் ஆவேஸ் கான் ஆசிய கோப்பையில் எப்படி செயல்பட போகிறார் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
ஹர்திக் பாண்டியா கூடுதல் பலம் :
image
இந்திய அணியை பொறுத்தவரை மிகவும் நம்பகமான வீரர் என்றால் அது ஹர்திக் பாண்டியா தான். கிரிக்கெட் வாழ்க்கையில் அவருடைய சிறந்த கட்டத்தில் இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. சமீபத்தில் இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹர்திக் பாண்டியா தொடர்ந்து 1 வருட காலங்களாக எந்தவிதமான கிரிக்கெட்டிலும் ஆடாமலும் சேர்க்கப்படாமலும் இருந்தார். இனி அவ்வளவு தான் என அனைவரும் நினைத்திருந்தபோது அவரின் விடா முயற்சியின் காரணமாக இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தார். மேலும் ஐபிஎல்லில் குஜராட் டைடன்ஸ்க்கு கேப்டனாகி கோபையையும் வென்றார். 
அதன் பிறகு இந்திய அணியில் இடம்பெற்ற ஹர்திக் பாண்டியா தன்னுடைய முதல் டி20 அரைசதத்தை பதிவு செய்தார். இதில் சிறப்பான ஒரு விஷயம் என்றால் அவருடைய பந்துவீச்சு தான். நான்கு ஓவர்களையும் முழுமையாக வீசும் அவர் குறைவாக ரன்களையே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வரை பெற்று கொடுக்கிறார். விக்கெட் கிடைக்காத சுழ்நிலையில் ஆஃப் கட்டர் மற்றும் வேகம் குறைவான பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டும் இந்தியாவிற்கு பெரிய பலமாக இருக்கிறது.
இந்தியாவின் கூடுதல் வாய்ப்பு :
image
தீபக் கூடா மிடில் ஆர்டரில் இறங்கி விக்கெட் விழும் நேரங்களில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மட்டும் இல்லாமல் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாகவும் ஆடி அணிக்கு ரன்களை சேர்க்கிறார். மேலும் அவர் ஒரு கூடுதல் பவுலராகவும் இருக்கிறார். தேவைபடும் இடத்தில் அவருடைய பந்து வீச்சை பயன்படுத்தி கொள்ளும் இந்தியா. ஹேண்டி பவுலர் எனப்படும் பவுலர்களை தான் எப்போதும் முக்கியமான தருணங்களில் களம் இறக்கி அதில் வெற்றியும் காண்பார் கேப்டன் ரோகித் சர்மா. அந்த வகையில் டி20 போட்டிகளில் விக்கெட்டுகளையும் எடுத்துள்ள தீபக் கூடா 5.80 எகனாமியோடு இந்தியாவிற்கு கூடுதல் பலமாக உள்ளார். 
அச்சுறுத்தல்கள் :
image
இந்தியாவிற்கு இருக்கும் பெரிய அச்சுறுத்தல் என்றால் அது விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரின் பேட்டிங் பார்ம். நடந்து முடிந்த 2021 டி20 உலககோப்பைக்கு பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி ஒரு வீரராக மட்டுமே ஆடி வரும் விராட் கோலி தொடர்ந்து தன்னுடைய பழைய பார்மை வெளிகாட்ட முடியாமல் திணறி வருகிறார். பலவிதமான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் விராட் கோலியின் திறமை மீது நம்பிக்கை வைத்து இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. ஆசிய கோப்பையை பொறுத்த வரையில் விராட் கோலியின் பேட்டிங் எப்போதும் சிறப்பான விதத்தில் இருந்திருக்கிறது. ஆசிய கோப்பையில் மட்டும் அவருடைய பேட்டிங் சராசரி 60க்கும் அதிகமாக உள்ளது. ஆசிய கோப்பையின் சிறந்த வீரராக இருந்து வரும் நிலையில் விராட் கோலி இந்த ஆசிய கோப்பையிலும் அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிக்காட்ட விரும்புவார்.
முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட கேஎல் ராகுல் 2022 ஐபிஎல் தொடருக்கு பிறகு எந்தவிதமான போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கிறார். அவர் தனது கடைசி போட்டியை பிப்ரவரி மாதத்திற்கு முன்பு விளையாடினார். இந்நிலையில் கேஎல் ராகுல் ஆசிய கோப்பை தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவர் எந்த இடத்தில் ஆட போகிறார், எப்படி ஆட போகிறார் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும். 
image
எதிர்வரும் டி20 உலககோப்பையை குறி வைத்திருக்கும் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா கூட்டணி இந்த ஆசிய கோப்பையை வென்று அந்த வெற்றியின் உற்சாகத்துடன் நடக்கவிருக்கும் டி20 உலககோப்பைக்கு செல்லும் இலக்கோடு பயணிக்க இருக்கிறது. ஆசிய கோப்பையை 8வது முறையாக இந்தியா வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.
– வேங்கையன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.