’சிலை சொல்லும் கதை’ – மூங்கில் வனத்தில் யானைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

41 தமிழ் செவ்விலக்கியங்களில் இருந்து யானைகள் குறித்த 763 சான்றுகளை ஆவணப்படுத்தியுள்ள தென்னன் மெய்மன், இன்று உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மூங்கில் வனம் என அழைக்கப்படும் நெல்லையப்பர் கோவிலில் ‘சிலை சொல்லும் கதை’ என்ற பெயரில் யானைச் சிற்பங்கள் பின்னணி குறித்தும், அதன் வாழ்க்கைமுறை குறித்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நேரடி பாடமும் ஓவிய பயிற்சியும் வழங்கினார்.
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மூங்கில் வனம் என்று அழைக்கப்பட்ட திருநெல்வேலியில் வேணுவன நாதர் என்ற வரலாற்று சிறப்புமிக்கது தற்போதைய நெல்லையப்பர் கோவில். இங்கு அகத்தியர் மலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம், அரசு அருங்காட்சியகம், நெல்லை நீர்வளம் அமைப்பு மற்றும் இந்து அறநிலையத்துறை இணைந்து “சிற்ப யானைகள் சொல்லும் கதைகள்” என்ற நிகழ்வை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்காக தஞ்சாவூரில் இருந்து வந்திருந்த பெருந்தச்சர் தென்னன் மெய்மன், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு கோவிலில் யானை சிற்பங்கள் சொல்லும் கதைகளை நேரடியாக விளக்கினார்.
ஸ்ரீகாந்திமதி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புஷ்பலதா வித்யா மந்திர் மற்றும் அமிர்தா வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவ மாணவிகள் கோவில் சிற்பங்களை தென்னன் மெய்மன் அவருடன் சேர்ந்து கதைக்கேட்டு ரசித்து நடந்தனர்.
image
கோவில் முழுக்க ஏராளமான யானை சிலைகள் இருந்தன. ஆனால் இன்றுதான் கதை சொல்லி ஒருவருடன் வந்தபோது இத்தனை நாட்களாக கோவிலுக்குள் சிலைகளாக இருந்த யானைகள் அனைத்தும் உயிருடன் நம்மை பார்ப்பதுபோல் தெரிந்தது. யானைகள் மூலமாகத்தான் காடுகள் செழிக்கிறது. ஆண் யானைகள் மட்டுமே மழை பொழிவதற்கு உண்டான பணியை செய்கிறது. யானைகள் தும்பிக்கை கொண்டு வணங்கும். ஆனால் போருக்காக செல்லும்போது எதிரி நாட்டில் யாரையும் வணங்காது. வெற்றி பெற்ற பின்னரே தன்னுடைய வணக்கத்தை செலுத்தும். யானை எடுத்து வைக்கும் ஒரு அடிக்கும் மற்றொரு அடிக்கும் இடைப்பட்ட அளவுகளை கொண்டே கோவில் கட்டுமான பணிகள் அந்த காலத்தில் நடந்துள்ளது.
image
பழங்கால தமிழர்கள் மன்னர்கள் யானை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். யானை வரும் வலசை பாதை யானைக்கானது. அங்கு மக்கள் இருந்தால் வேல் கொண்ட காவலர்கள் மூலம் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளார்கள் என்பது சங்க தமிழ் இலக்கியங்கள் கூறி இருப்பதை மெய்மன் மாணவ மாணவியரிடம் எடுத்துரைத்தார். மேலும் 41 தமிழ் செவ்விலக்கியங்களில் இருந்து யானைகள் குறித்த 763 சான்றுகளை ஆவணப்படுத்தி அவற்றில் 150 சான்றுகளை ஓவியங்களாக ஆவணப்படுத்தி உள்ளார்.
அந்த அடிப்படையில் கோவிலில் ஒரு மண்டபத்தில் அமைந்துள்ள 20 யானை சிலைகள் முன்பாக மாணவ மாணவிகளை அமர வைத்து யானையை ஓவியமாக வரைதல் குறித்த பயிற்சி வழங்கினார். மிகுந்த ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் யானைகள் குறித்த கதைகளை கேட்டுக் கொண்டு ஓவியங்களை வரைந்தனர்.
image
இன்று நடந்த பயிற்சி குறித்து கலந்து கொண்ட மாணவி சூடாமணி கூறும்போது…
’’யானை ஒரு நாளைக்கு 25 கிலோ மீட்டர் தூரம் நடக்கும். யானை உண்ணும் உணவில் பாதி மட்டுமே சேமிக்கும். யானையின் கழிவு மண்ணுக்கு உரமாகி, மரம் செடியாக வளர்ந்து அது வனமாகி, வனம் மலைக்கு தேவை! மலை நீருக்கு தேவை, நீர் மனிதனுக்கு தேவை இப்படி மனிதர்கள் வாழ யானைகள் தேவை. கடந்த 2012ஆம் ஆண்டு வில்லியம் சாண்ட்னர் இயக்கிய “வனத்துக்கு திரும்பு” என்ற ஆங்கிலப் படம் தான் யானையை பாதுகாக்க வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு விலங்கு அழிந்தாலும் மனிதனும் வெல்ல அழிவான் என்ற உயிர்ச்சூழல் பாதிப்பை தெரிந்து கொண்டோம்’’ என கூறினார்.
image
யானைகளுக்கும் மனிதர்களுக்குமான புரிதல் குறித்து மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக நெல்லை வந்திருந்த தஞ்சாவூர் பெருந்தச்சர் மெய்மன் பயிற்சி குறித்து கூறும்போது…
‘’யானைகள் இனமாக வாழக்கூடிய பேருயிர். யானைகளின் பெரும் நோக்கம் என்பது சுற்றுச்சூழலை ஒழுங்கு செய்கின்ற முயற்சியில் அரசனுக்கு துணையாக நின்ற பெரிய படைபிரிவு. யானைகளுக்கு அக வாழ்க்கை புற வாழ்க்கை உள்ளது. அவை போருக்கு சொல்லும். நமது இலக்கியங்களில் யானைகளை பிரிக்க முடியாத அளவிற்கு 60 விழுக்காடு யானைகள் பற்றிய குறிப்புகள் உள்ளது. தமிழ் அறிஞர்கள் இதில் அக்கறை எடுக்க வேண்டும் பெரிய பல்கலைக்கழகங்களில் யானை பாசறைகள் உருவாக்க வேண்டும். யானைகளுக்கு நன்றாக தமிழ் தெரியும். தமிழில் ஒரு செய்தியை ஒரு யானை மற்றொரு யானைக்கு கடத்தும். அதனை அரசருக்கு குறிப்பாக எழுதிக் கொடுத்ததாக இலக்கியங்களில் உள்ளது. அந்த யானைக்கு வம்பனி என்று பெயர்.
image
வர்ம யானை, சூழி யானை, மாரி யானை, உறவுக்களிறு இப்படி ஒவ்வொரு யானையும் என்னென்ன வேலைகள் செய்யுமோ அதற்கு ஏற்றார் போல் சங்க இலக்கியங்களில் பெயர்கள் உள்ளது. சங்க இலக்கியங்களில் இருந்து 150 யானைகளை ஓவிய காட்சியாக மாற்றி அவை எந்த இலக்கியத்தில் எந்த பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்ற தகவலையும் பதிவு செய்துள்ளோம். யானை எந்தப் பாதையில் செல்கிறதோ அதற்கு நேர் மேலே மழை வரும். மழை வரும் பாதையை உருவாக்கும் நுட்பமும் ஆற்றலும் யானைக்கு இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
image
மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து அகத்தியர்மலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மைய ஆராய்ச்சியாளர் மதிவாணன் கூறும்போது…
’’ஆகஸ்ட் 12 உலக யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. யானைகள் தற்போது வாழிடங்கள் அழிப்பு, வலசைப் பாதை ஆக்கிரமிப்பு என பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. தமிழ் இலக்கியங்களில் இருந்து கோவில் சிற்பங்களில் இருந்து யானை குறித்த தரவுகளை எடுத்து அதனை மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்கும் பயிற்சி இன்று அளித்துள்ளோம். யானைக்கு கொடுத்த ஓவிய பயிற்சியும், கோவிலில் யானை சித்திரங்களில் உள்ள கதைகள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்’’ என்றார்.
– நெல்லை நாகராஜன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.