பாட்னா: பீகார் கூலி தொழிலாளிக்கு ரூ.37 லட்சம் வருமன வரி செலுத்தும்படி நோட்டீஸ் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் காகரியா மாவட்டம், மகாகுனா கிராமத்தை சேர்ந்த தினக்கூலி தொழிலாளி கிரிஷ் யாதவ். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ‘நான் டெல்லியில் கூலி தொழில் செய்து வருகிறேன். என்னுடைய ஒரு நாள் வருமானம் ரூ.500. இந்நிலையில், நான் ஒரு மோசடியாளர் என்றும், ரூ.37.5 லட்சம் வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்றும் வருமானத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லியில் ஒரு இடைத்தரகர் மூலம் பான் கார்டு பெறுவதற்கு முயற்சித்தேன். அதன் பிறகு இடைத்தரகரை நான் பார்க்கவில்லை. அந்த நோட்டீசில் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் எனக்கு தொடர்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. நான் இதுவரை ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றதே இல்லை,’ என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில் ,‘கிரிஷின் பெயரில் பதிவு செய்யப்பட்ட பான்கார்டு எண்ணுக்கு வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இது ஒரு மோசடி வேலை ஆக கூட இருக்கலாம்,’ என்றார்.